Kanchipuram Exports: காஞ்சிபுரம் சாதனை ஏற்றுமதியில் முதலிடம்! 1.08 லட்சம் கோடி ஏற்றுமதி! டாப் 10 லிஸ்ட் இதோ!
Kanchipuram Export: "காஞ்சிபுரம் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளது, சுமார் 1 லட்சத்து 8000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது"

"தமிழ்நாட்டில் கடந்த 6 மாதத்தில் ஏற்றுமதி 2.25 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. காஞ்சிபுரம் மட்டும் சுமார் 1.08 லட்சம் கோடி ரூபாய்க்கு மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது"
வளர்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டம் - Kanchipuram District
சென்னையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வந்தாலும், சென்னையின் புறநகர் மாவட்டங்களாக இருக்கக்கூடிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
குறிப்பாக உலக அளவில் முன்னணி நிறுவனங்களும் காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வருவதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டம் தொடர்ந்து ஏற்றுமதியில் முதலிடம் வகித்து வருகிறது. இந்திய அளவில் மொபைல் போன்கள் ஏற்றுமதி செய்வதிலும், காஞ்சிபுரம் முதலிடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் சாதனை
தமிழகத்தில் ஏற்றுமதிக்கான நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில், 2.25 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1.97 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. நம் நாட்டில் செயல்பாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் அதிக அளவாக 31,517 ஆலைகளுடன் தமிழகம் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது.
குறிப்பாக மோட்டார் வாகனம், ஸ்மார்ட் போன்கள், ஆயத்த ஆடைகள், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், ஜவுளி உற்பத்தி உள்ளிட்டவையில் தமிழகம் முன்னணியில் இருந்து வருகிறது. இந்திய அளவில் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவிற்கு அடுத்து தமிழகம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. குஜராத் 4.93 லட்சம் கோடி ரூபாயும், மகாராஷ்டிரா 2.75 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளன.
நம்பர் ஒன் இடத்தை பிடித்த காஞ்சிபுரம் - Kanchipuram No.1
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் விலை, 1.08 லட்ச கோடி ரூபாயுடன் முதலிடம் பிடித்துள்ளது. இது கடந்தாண்டு 80,410 கோடி ரூபாயாக இருந்தது. அதற்கு அடுத்த இடத்தில் சென்னை 32,422 கோடியும், திருப்பூர் 21,328 கோடி ரூபாயும், கோவை 16,168 கோடி ரூபாயும், திருவள்ளூர் 15910 கோடி ரூபாயும், வேலூர் 4984 கோடி ரூபாயும் , கரூர் 3470 கோடி ரூபாயும், தூத்துக்குடி 3612 கோடி ரூபாயும், ஈரோடு 3600 கோடி ரூபாயும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.





















