காஞ்சிபுரம்: பிரசவ வலியால் துடித்த இளம் பெண்: 108 ஆம்புலன்ஸில் சுகப்பிரசவம்! துரித செயல், நெகிழ்ச்சி சம்பவம்!
"காஞ்சிபுரம் அருகே மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களால் வெற்றிகரமாக பிரசவம் பார்க்கப்பட்டது"

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு, மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களால் வெற்றிகரமாக பிரசவம் பார்க்கப்பட்டது. தாயும் சேயும் நலமுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
108 ஆம்புலன்ஸ் சேவை
உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி மதுமதி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இன்று மதியம் சுமார் 2 மணியளவில் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரது உறவினர்கள் 108 அவசர ஊர்திக்கு அழைப்பு விடுத்தனர்.
சாலையோரம் நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்
மதுமதியை ஏற்றிக்கொண்டு, அவரது உறவினர்களுடன் 108 ஆம்புலன்ஸ் வாகனம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு விரைந்து சென்றது. வாகனம் ஆர்ப்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்தபோது, மதுமதிக்கு பிரசவ வலி அதிகமானது. இதைப் பார்த்த ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர் குணசீலன், உடனடியாக ஓட்டுநரிடம் வண்டியை சாலையோரமாகப் பாதுகாப்பாக நிறுத்தக் கூறினார்.
சுகப்பிரசவம் மூலம் பிறந்த பெண் குழந்தை
ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே, மருத்துவ உதவியாளர் குணசீலனின் துரித நடவடிக்கையாலும், துணையாலும், மதுமதிக்கு அழகான பெண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது.
ஆம்புலன்ஸிலேயே பிரசவம் நடந்ததைக் கண்ட உறவினர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தாயையும், சேயையும் பத்திரமாகக் காப்பாற்றிய மருத்துவ உதவியாளர் குணசீலன் மற்றும் ஓட்டுநருக்கு மனதார நன்றி தெரிவித்தனர்.
மேல் சிகிச்சைக்காக அனுமதி
பிரசவம் முடிந்தவுடன், குழந்தைக்கும் தாய்க்கும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதல் உதவி அளித்தனர். அதன் பின்னர், இருவரும் மேல் சிகிச்சைக்காகக் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டனர்.
ஊழியருக்கு குவிந்த பாராட்டுக்கள்
தாய்க்கும் சேய்க்கும் உரிய நேரத்தில் மருத்துவ உதவி செய்து, இரு உயிர்களையும் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களின் இந்தச் சிறப்பான செயலை, அவ்வழியே சென்ற பொதுமக்களும் மருத்துவமனை நிர்வாகமும் பாராட்டி வருகின்றனர். 108 ஆம்புலன்ஸில் குழந்தை நல்லபடியாக பிறந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு காலகட்டத்தில் முறையான ஆம்புலன்ஸ் வசதி இல்லாதபோது, பிரசவத்தில் ஏற்பட்ட தாய் சேய் மரணங்கள் அதிகமாக இருந்தது. இந்தியாவில் 108 ஆம்புலன்ஸ் செயல்பாட்டிற்கு வந்ததிலிருந்து, பிரசவத்தின் போது தாய் சேய் இறப்பு விகிதம் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது





















