மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் கதை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அனைத்தும் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான ஆர்.காமராஜ் வீடு மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்கள் வீடு உட்பட 49 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
58 கோடிக்கும் அதிகமாக வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்தாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது மகன்கள் இன்பன், இனியன் மற்றும் காமராஜின் சம்பந்தி ஆகியோரது வீடு, அலுவலகங்கள் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருவதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் ஒருப்பக்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ரெய்டு நடைபெறும் தகவல், நேற்று முன்னாள் அமைச்சர் காமராஜ் தரப்புக்கு தெரிந்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இதனால்தான் ரெய்டு தகவல் அறிந்து விமான டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டதா எனவும் கேள்வி எழுந்துள்ளது. காமராஜ் ஆடிட்டரின் அலுவலகத்தில் இரண்டு நாட்களாக தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.காமராஜ் நிறுவனத்திற்கும், ஒப்பந்ததாரர் செய்யாதுரை நிறுவனத்திற்கும் ஒரே ஆடிட்டர் என்பது விசாரனையில் தெரியவந்துள்ளது. முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடக்கும் நிலையில் வருமான வரித்துறையும் வருகை தந்துள்ளது.
தற்போது இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, ”எத்தனை அடக்குமுறை வந்தாலும் சரி ஜனநாயக அமைப்பில் நீதிமன்றம் என ஒன்று இருக்கிறது. மக்கள் பணியாற்றுபவர்களை வழக்கு பதிவு செய்வதும், ஜனநாயக கடமையை ஆற்ற விடாமல் செய்த ரவுடியை பிடித்து கொடுத்தற்கு என் மேல் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. தமிழ் நாட்டை கொடுமையான அரசு ஆண்டு கொண்டு வருகிறது. கழக முன்னோடிகள் மீது வழக்கு பதிவு செய்ய கங்கனம் கட்டி கொண்டு அலைகிறது. அனைத்தும் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. இது பூனை பகல் கனவு காண்பது போல் ஆகும். மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் கதை இது. ” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திரசேகர் ரெய்டு விவரத்தை பற்றி கேட்டபோது அமைச்சர் ஜெயக்குமார் “ வேலுமணி அவர் நமது முன்னாள் அமைச்சர் அவரை பற்றி கேட்டால் என்னால் சொல்ல முடியும்.சந்திரசேகர் ஒரு தொழிலதிபர் அவரின் மீது விடுத்த ரெய்டு மீது நான் என்ன சொல்ல முடியும்.” என கூறினார்