Pongal Train Ticket: பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு போறீங்களா? தொடங்கியது டிக்கெட் முன்பதிவு.. முழு விவரம்..
பொங்கல் பண்டிகை முன்னிட்டு இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது. அடுத்த 4 நாட்களுக்கு பொங்கல் பண்டிக்கைகான ரயில் டிக்கெட் முன்பதிவு இருக்கும் என்பதால் பொதுமக்கள் தங்களது பயணத்தை திட்டமிடும்படி ரயில்வே சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.
பொதுவாக பண்டிகை காலம் என்றாலே வெளியூரில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்குச் சென்று குடும்பத்தினருடன் நண்பர்கள் சூழ கொண்டாடுவார்கள். அதற்கு மக்கள் ரயிலில் பயணம் மேற்கொள்வது வழக்கம். பேருந்து, விமானம் என பல போக்குவரத்து வசதிகள் இருந்தாலும் மக்கள் பெரும்பாலும் விரும்புவது ரயில் தான். ரயிலில் எந்த தொந்தரவும் இல்லாமல், பாதுகாப்பாக, அலைச்சல் இல்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் என்ற காரணத்தால் மக்கள் ரயிலில் செல்ல விரும்புகின்றனர். மேலும் விமானம் மற்றும் பேருந்து ஆகிய போக்குவரத்து சேவைகளில் கட்டணம் அதிகம் என்பதாலும் மக்கள் ரயிலில் பயணம் மேற்கொள்ளகின்றனர்.
வழக்கமாக எந்த ஒரு பண்டிகையாக இருந்தாலும் அதற்கென சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் என்கிற பெயரில் தொலை தூரங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் சாதாரண நாட்களில் கூட டிக்கெட்டுகள் இல்லாத நிலை தான் இருந்து வருகிறது. குறிப்பாக சுபமுகுர்த்த நாட்கள், விஷேச நாட்களில் டிக்கெட்டுகள் கிடைப்பது மிகவும் கடினம். டிக்கெட் கிடைக்காத மக்கள் பெரும்பாலும் தட்கல் கோட்டாவில் டிக்கெட் முன்பதிவு செய்வார்கள்.
நடப்பாண்டு அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகையாக வரும் தீபாவளி வரும் நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு கடந்த ஜூலை 12 ஆம் தேதி தொடங்கி சில நிமிடங்களில் அனைத்து வகுப்பு டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்ததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர். இப்படியான நிலையில் தொடர் விடுமுறை நாட்கள் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியூரில் இருப்பவர்கள் தங்கள் ஊருக்கு செல்வது வழக்கம்.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று (செப்டம்பர் 13) தொடங்கியது. ரயில்களில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளதால் இன்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜனவரி 11 (வியாழக்கிழமை) செல்ல நினைப்பவர்கள் இன்று (செப்டம்பர் 13) முன்பதிவு செய்யலாம்
- ஜனவரி 12 (வெள்ளிக்கிழமை) செல்ல நினைப்பவர்கள் நாளை (செப்டம்பர் 14) முன்பதிவு செய்யலாம்
- ஜனவரி 13 (சனிக்கிழமை) செல்ல நினைப்பவர்கள் செப்டம்பர் 15 ஆம் தேதி டிக்கெட் முன்பதிவு செய்யலாம்
- ஜனவரி 14 (ஞாயிற்றுக்கிழமை) பயணம் மேற்கொள்பவர்கள் செப்டம்பர் 16 ஆம் தேதி டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சிரமமின்றி, கடைசி நேர சிக்கலை தவிர்க்க தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஜூன் மாதம் தீபாவளி பண்டிக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 3 முதல் 4 நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் புக் செய்யப்பட்டது. எனவே பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவை மக்கள் திட்டமிட்டு செய்ய வேண்டும் என தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.