Tiruchendur Avani Festival: திருச்செந்தூரில் அரசாங்கம் செய்யும் செந்தில்நாதன்! இன்று பிரமாண்ட தேரோட்டம்..!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமான திருவிழா ஆவணி திருவிழா.
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆவணித்திருவிழா கடந்த செப்டம்பர் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 10ம் தேதியன்று சண்முகர் வள்ளி தெய்வானையுடன் சிவப்பு உடையுடன் எழுந்தருளிய நிலையில், இன்று பிரமாண்டமாக ஆவணி தேரோட்டம் நடைபெறவுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழ்வது திருச்செந்தூர் முருகன் கோயில். மற்ற ஐந்து வீகளும் மலையில் அமைந்துள்ள நிலையில், இந்த கோயில் மட்டுமே கடற்கரையோரம் அமைந்துள்ள சிறப்பை பெற்றுள்ளது. இங்கிருந்து அலைகடலென திரண்டு வரும் மக்களுக்கு முருகன் அருள்பாலிக்கிறார்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமான திருவிழா ஆவணி திருவிழா. மற்றொரு திருவிழா மாசி மாசம் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆவணித்திருவிழா கடந்த செப்டம்பர் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் வரை இத்திருவிழா நடைபெற உள்ள நிலையில், இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா இன்று இரவு 7 மணிக்கு பெரிய திருப்பல்லக்கு நடைபெறுகிறது.
ஆவணி தேரோட்டம்:
முன்காலத்தில் இப்பகுதியை ஆண்ட திருவிதாங்கூர் சமஸ்தான ராஜா, உள்ளூர் மக்களின் தரிசிக்க நடத்திய மூலத்திருவிழாதான் ஆவணித் திருவிழா. மாசித் திருவிழாவைப்போல ஆவணித் திருவிழாவும் 12 நாள்கள் நடைபெறும். ஆனால், குமரவிடங்கப்பெருமான் பெரியதேரில் வலம் வருதலுக்குப் பதிலாக சிறியதேரில் வலம் வருவார். தெப்ப உற்சவமும் நடைபெறாது.
ஆவணித் திருவிழா தேய்பிறை நாள்களிலும், மாசித்திருவிழா வளர்பிறை நாள்களிலும் நடைபெறும். இங்குள்ள சண்முகர், சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் அதாவது படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் புரியும் பிரம்மா, விஷ்ணு ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாய் அருள்பாலிப்பவர். அவரை அந்த வடிவத்திலேயே வழிபடும் அற்புதத் திருவிழாதான் இந்த ஆவணித் திருவிழா.
தேரோட்டத்திற்கு பிறகு அடுத்தது என்ன..?
செப்டம்பர் 14 அதாவது நாளை இரவு 7 மணி புஷ்ப சப்பரம் தெப்பக்குளம் மண்டபம் சேர்தல் அபிஷேகம், அலங்காரம் ஆராதனை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து, திருவீதி வலம், மேலைக்கோவில் சேர்த்தல் நடைபெறும். நாளை மறுதினம் அதாவது செப்டம்பர் 15 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், அன்று இரவு 9 மணி மலர் கேடய சப்பரத்தில் சுவாமி அம்பாள் திருக்கோவிலுக்குள் சேர்தல் நிகழ்வும் நடைபெறுகிறது.