Jallikattu 2024 LIVE: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு: 18 காளைகளை அடக்கி கருப்பாயூரணி கார்த்தி முதலிடம்
Jallikattu 2024 LIVE Updates: மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பான தகவல்களை உடனுக்குடன் காணலாம்.

Background
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறுவது வழக்கம். ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மதுரையில் உள்ள அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இந்த ஜல்லிகட்டு போட்டிகள் உலக அளவில் புகழ் பெற்றது.
அதன்படி ஜனவரி 15 ஆம் தேதியான இன்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மிகத்தீவிரமாக நடைபெற்ற நிலையில், இன்று நடக்கும் போட்டியில் 1000 காளைகள், 800 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கான டோக்கன் நேற்று வழங்கப்பட்டது. இன்று காலை மாடுகள் மற்றும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து வாடிவாசலில் இருந்து காலை 7.10 மணியளவில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவனியாபுரத்தில் போட்டி நடைபெறும் இடத்தில் இருந்து 1 கிலோ மீட்ட தூரம் வரை இருபக்கமும் தென்னை மர கட்டைகளால் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அரசு வேலை கொடுத்தால் நல்லது: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்தவர்
முதலிடம் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசு வேலை கொடுத்தால் நன்றாக இருக்கும். எனக்கு அப்பா இல்லை. அம்மாவுடன் சேர்ந்து கட்டிட வேலைக்கு சென்று வருகின்றேன் என அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதலிடத்தை பிடித்த கார்த்தி தெரிவித்துள்ளார்.
நான் தான் முதலிடம் பெற்றேன்: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கொந்தளித்த அபிசித்தர்
நான் தான் முதலிடம் பிடித்தேன். போட்டியை மாலை 6.30 வரை நீடித்தது தவறு. எனக்கு கார் பரிசு தேவையில்லை. முதலிடம் என அறிவித்தாலே போதும். அமைச்சர் மீது புகாரளிப்பேன் என அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 17 மாடுகளை பிடித்து இரண்டாம் இடம் பிடித்த அபிசித்தர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.





















