TASMAC : தீபாவளிக்கு டாஸ்மாக் கடைகள் உண்டா? - குழப்பத்தில் குடிமகன்கள்! கடைசி நேரத்தில் கை நடுங்க வைக்கும் பகிர்வுகள்!
மகாவீர் ஜெயந்திக்கும், மகா நிர்வாணம் தினத்துக்கும் இடையே ஏற்பட்ட குழப்பத்தை அரசு சரிவர தீர்க்காததால், மதுகுடிப்போர்கள் சிலர், நாளை கடைகள் மூடப்படுமா என்று சந்தேகத்துடனேயே இருக்கின்றனர்.
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாட்டில் நாளை மதுக்கடைகள் மூடப்படுவதாக சமூகவலைதளங்களில் பரவும் தகவலால் மதுகுடிப்போர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அதுவும் தீபாவளி அன்று கடைகள் மூடப்படுகிறதா என்று ஏக்கத்தில் ஏங்கியுள்ளனர்.
கடந்த 30ஆம் தேதி அரசு சார்பாக அறிவிப்பு ஒன்று வெளியானது. அந்த அறிவிப்பு என்னவென்றால், தீபாவளி கொண்டாடப்படும் நாளான நவம்பர் 4-ந் தேதிதான் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி கடைகள் மூடப்படும் என்பதுதான். இதனால், பொதுமக்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். தீபாவளி என்றாலே கறி எடுத்து சமைத்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடுவார்கள். அந்த தினத்தில், அரசின் இந்த அறிவிப்பை கண்டு ஏமாற்றம் அடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து, இறைச்சி கடை உரிமையாளர்கள், பொதுமக்கள் உள்பட பலதரப்பினரும் தீபாவளி தினத்தன்று இறைச்சி கடைகளை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து, தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது,
“இந்த ஆண்டு வரும் நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதேநாளில் மகாவீர் ஜெயந்தி நாளும் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மகாவீர் ஜெயந்தி நாளன்று இறைச்சி கடைகள் மூடப்படக்கூடிய நடைமுறை தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் சூழலில், பொதுமக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து வந்த கோரிக்கைகளைப் பரிசீலித்து தீபாவளி நாளன்று தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இறைச்சி கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
அதேவேளையில் ஜெயின் மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளிலுள்ள இறைச்சி கடைகளும், ஜெயின் மத வழிபாட்டுத் தளங்களைச் சுற்றியுள்ள இறைச்சி கடைகள் மூடப்படும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த அறிவிப்பால், அசைவ பிரியர்கள் ஹேப்பி ஆனார்கள். ஆனால், தற்போது மதுப்பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். ஏன் அந்த சோகம் என்றால், மகாவீர் ஜெயந்திக்கு இறைச்சி கடைகள் மூடப்படுவது போல், மதுக்கடைகளும் மூடப்படுவது வழக்கம். அதேபோல், தீபாவளி தினமான நாளை மதுக்கடைகள் மூடப்படுமா அல்லது இறைச்சிக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிப்பை போல் மதுக்கடைகள் மூடப்படாது என்று அறிவிப்பு வருமா என்று மதுபிரியர்கள் ஏக்கத்தில் இருந்த நிலையில், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாட்டில் நாளை மதுக்கடைகள் மூடப்படுவதாக சமூகவலைதளங்களில் வதந்தி ஒன்று பரவி அவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
ஆனால், மதுக்கடைகள் தொடர்பாக எந்த அறிவிப்பும் அரசு வெளியிடுமா என்று எதிர்பார்த்த நிலையில், சமூகவலைதளங்களில் பரவிய வதந்தி தொடர்பாக டாஸ்மாக் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, மதுக்கடைகள் மூடப்படாது என்று கூறினார்.
இதனிடையே, தீபாவளி தினமான நவம்பர் 4ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி இல்லை என்றும், அன்றைய தினம் மகாவீரர் மகா நிர்வாணம் (முக்தி) அடைந்த தினம் மட்டுமே ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள் கொண்டாடுகின்றனர் என்றும் தெரியவந்தது. இதனால், நாளை டாஸ்மாக் மூடப்படாது என்று கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
ஆனால், மகாவீர் ஜெயந்திக்கும், மகா நிர்வாணம் தினத்துக்கும் இடையே ஏற்பட்ட குழப்பத்தை அரசு சரிவர தீர்க்காததால், மதுகுடிப்போர்கள் சிலர் நாளை கடைகள் மூடப்படுமா என்று சந்தேகத்துடனேயே இருக்கின்றனர்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்