சென்னைக்கு வரும் ஐ.என்.எஸ். விக்ராந்த்...! காட்டுப்பள்ளி துறைமுகத்தில் நிறுத்த திட்டம்...!
இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். போர்க்கப்பலை சென்னைக்கு அடுத்த காட்டுப்பள்ளியில் நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவிலே முழுக்க, முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட போர்க்கப்பல் ஐ.என்.எஸ். விக்ராந்த். இந்த பிரம்மாண்ட போர்க்கப்பலை கடந்த வாரம் கேரளாவில் உள்ள கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பல்வேறு வசதிகளை கொண்ட அதிநவீன ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலை நிறுத்துவதற்கு விசாகப்பட்டினம் துறைமுகத்தில் போதிய இடம் இல்லை. இதனால், விக்ராந்த் கப்பலை எங்கு நிறுத்துவது என்று கடற்படை அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வந்தனர். இந்த நிலையில், ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை சென்னை அருகே உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தில் நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலை தற்போது தற்காலிகமாக காட்டுப்பள்ளி துறைமுகத்தில் நிறுத்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். விக்ராந்த் போர்க்கப்பலை நிறுத்துவதற்கான வசதிகளை விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏற்படுத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர். காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்திற்கு கொண்டு வரப்பட உள்ள விக்ராந்த் கப்பல் சுமார் 8 ஆண்டுகள் நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ராட்சத கப்பல்களை நிறுத்துவதற்கான ஆழம், அதற்கான பராமரிப்பு வசதிகள் இருக்கிறது. இதன்காரணமாகவே, காட்டுப்பள்ளி துறைமுகத்தை அதிகாரிகள் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயத்தில், விக்ராந்த் கப்பலை விசாகப்பட்டினம் துறைமுகத்திலே நிறுத்துவதற்கான கட்டுமான பணிகளும் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.
ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கிய போர்க்கப்பல் ஆகும். இந்த கப்பல் ரூபாய் 20 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்டது. இந்த விக்ராந்த் கப்பலில் சுமார் 2 ஆயிரத்து 300 பேர் பணியாற்றுகின்றனர். ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பல் நடுக்கடலில் பயணிக்கும்போது எவ்வளவு பெரிய ராட்சத அலைகள் வந்தாலும் அதன் தாக்கம் கப்பலில் தெரியாது.
ஒரு நகரத்திற்கு போதுமான மின்சார சக்தியை கப்பலின் எஞ்சின் உருவாக்குகிறது. ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலில் ஒரே நேரத்தில் 600 பேர் வரை உணவு அருந்த முடியும். கப்பலின் உள்ளே 16 படுக்கைகளை கொண்ட மருத்துவமனையும் உள்ளது. இதில், அறுவை சிகிச்சை அறைகள், தீவிர சிகிச்சை பிரிவுகள் தனித்தனியே உள்ளது.
மேலும் படிக்க : Watch : கேரளாவை புரட்டிய கனமழை.. தார் சாலைகளை தகர்த்த வெள்ளம்! ரோட்டுக்குள் குகையா? வைரல் வீடியோ
மேலும் படிக்க : Watch Video : விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழை.. சாலைகளில் ஓடும் வெள்ளம்.. தத்தளிக்கும் பெங்களூரு