பூமி நல்லாயிருக்கணும்னா கடற்பசு நல்லா இருக்கணும்.. தேவையை உணர்ந்த தமிழகம் - குவியும் பாராட்டு!
உலகின் ஒரே கடல்வாழ் தாவர உண்ணி பாலூட்டியான கடற்பசுவைப் பாதுகாக்கும் முயற்சிக்காக தமிழக அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
உலகின் ஒரே கடல்வாழ் தாவர உண்ணி பாலூட்டியான கடற்பசுவைப் பாதுகாக்கும் முயற்சிக்காக தமிழக அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பல் உயிர் பாதுகாப்பு மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முன் உள்ளது. இந்த வேளையில் தமிழக அரசு கடற்பசு பாதுகாப்புக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. இதுபோன்ற நடவடிக்கைகள் இன்னும் அதிகமாக தேவைப்படுகின்றன என்று கூறியுள்ளார்.
Biological Diversity(Amendment) Bill is before Parliament's Joint Committee. Many MPs raised the issue of protection of marine biodiversity. What Tamil Nadu govt has done recently to protect the dugong is highly commendable. More such initiatives needed.https://t.co/A94juICGzP
— Jairam Ramesh (@Jairam_Ramesh) January 24, 2022
முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது வனத்துறை அமைச்சர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தமிழ்நாட்டில் அழிந்துவரும் நிலையில் உள்ள மிக அரிதான கடற்பசு இனத்தையும் அதன் கடல் வாழ்விடங்களையும் பாதுகாக்கும்பொருட்டு கடற்பசு பாதுகாப்பகம் மன்னார் வளைகுடா பகுதியில் ஏற்படுத்தப்படும் என்று வனத் துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் அறிவித்தார். கடல்வாழ் விலங்கு வேட்டை தடுத்தல் மற்றும் கடத்தல் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் குற்றங்களை தடுக்க சிறப்பு கடல்சார் உயர் இலக்கு படை உருவாக்கப்படும்.
500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பாதுகாப்பகம்:
மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜல சந்தி இடையேதான் கடற்பசு அதிகம் வாழ்கின்றன. இவற்றைப் பாதுகாக்க 500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவொல் அதிராம்பட்டினம், அம்மாபட்டினம்ம் இடையே இந்த பாதுகாப்பகம் அமைகிறது. ஐயுசிஎன் (International Union for Conservation of Nature Red List of Threatened Species) என்ற சர்வதேச அமைப்பு கடற்பசுவை பாதிக்கப்படக்கூடிய உயிரினத்திலிருந்து அழிந்து வரும் ஓர் உயிரினமாக பட்டியலிட்டுள்ளது.
பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையிலும் உலகம் முழுவதுமே 200 முதல் 250 கடற்பசுக்கள் மட்டுமே இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் 150 கடற்பசுக்களை மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தியிலேயே பார்க்கலாம். அந்தமான் அருகே 75 கடற்பசுக்களும், கச் வளைகுடாவில் 50 கடற்பசுக்களும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக அரசின் கூடுதல் செயலர் சுப்ரியா சூலே இது குறித்து ஒருமுறை கூறும்போது, கடற்பசுக்களைக் காப்பதன் மூலம் நாம் அந்த இனத்தை மட்டும் காப்பாற்றவில்லை. காலநிலை மாற்றத்திலிருந்து பூமியைக் காப்பாற்றுகிறோம். மன்னார் வளைகுடாவின் வளமான கடல் தன்மை இதனால் பாதுகாக்கப்படும் என்றார்.
மன்னார் வளைகுடாவில் மிகவும் அரிதான மீன் இனங்கள், கடல் ஆமைகள், கடற் குதிரைகள், கடல் வெள்ளரிகள் உள்ளன. காலநிலை மாற்றத்தால் இங்குள்ள கடல்வாழ் உயிரினங்கள், பவளப் பாறைகள் அழிவை எதிர்நோக்கியுள்ளன. இத்துடன் மோசமான மீன்பிடி நடைமுறைகளும், ஆலைக் கழிவுகளும் அச்சுறுத்தலாக உள்ளன.
சென்னையைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் ஜி.சுந்தர்ராஜன் இது குறித்து கூறும்போது, கடற்பசுவும், கடற்புல்லும் தானும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் தான் கடற்பசு பாதுகாப்பகம் உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறினார்.
மேற்குக் கரையில் ஒதுங்கும் கடல் புற்கள்:
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் கேரளாவின் புகழ்பெற்ற கோவலம் கடற்கரையில் புற்கள் கரை ஒதுங்கியிருந்தன. கடற்கரையோர கால்நடைகள் அதனை உண்ணாமல் புறக்கணித்தன. அதை ஆய்வு செய்தபோது அது Oceana serrulata மற்றும் Syringodium isoetifolium ஆகிய இருவகையான கடல் புற்கள் என்பதும் அவை மன்னார் வளைகுடாவைச் சேர்ந்தது என்பதும் தெரியவந்தது. மோசமான மீன்பிடி முறைகளால் கடற்பரப்பில் இருந்து வேரோடு அகற்றப்படும் கடற் புற்கள் தான் இப்படி அங்கே கரை ஒதுங்கியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இப்போது புரிகிறதா கடற்பசு பாதுகாப்பகத்தின் அவசியம்.