(Source: ECI/ABP News/ABP Majha)
தமிழகத்தில் இறந்த 200 யானைகள் கணக்கில் வரவில்லை… தந்தங்களுக்காக கொல்லப்பட்டதா?
வெறுமனே எல்லா யானைகளுக்கு இயற்கை மரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டில் ஒரு ஆண் யானை இறந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் புகைப்படத்தில் பார்த்தால் அது பெண் யானையாக இருக்கிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச், முதன்மை தலைமை வனப் பாதுகாவலரும், தமிழ்நாடு தலைமை வனவிலங்கு காப்பாளருமான சேகர் குமார் நிராஜின் இடமாற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. பணியில் சேர்ந்த ஒன்பது மாதங்களில், அவர் அரசின் பாதுகாப்பு நடைமுறைகளில் முறைகேடு செய்துள்ளதாகவும், மேலும் வனவிலங்கு குற்றங்களை விசாரிப்பதில் அவரது உதவியை நீதிமன்றம் விரும்புவதாகவும் கூறப்பட்டுள்ளது. சாந்தா தியாகராஜன், ஒரு நேர்காணலில், யானை மரணங்கள் தொடர்பான எண்ணிக்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து உன்னிப்பான விசாரணை வேண்டும் என்றும், பாதுகாப்பு உத்திகளை மறுபரிசீலனை செய்வது குறித்தும் பேசியுள்ளார்.
தமிழகத்தில் யானை இறப்பு எண்ணிக்கை குறித்த தரவுகளில் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா என்று கேட்ட கேள்விக்கு, "2011 முதல் 2020 வரை தமிழகத்தில் பலியான யானைகளுள் பல பதிவு செய்யப்படவில்லை. 2018 ஆம் ஆண்டு கேரளாவில் யானை தந்தம் கைப்பற்றப்பட்ட வழக்குக்கு பிறகு, தமிழகத்திலும் பல யானைகள் வேட்டையாடப்பட்டது, கொல்லப்பட்டது போன்ற செய்திகள் வெளிச்சத்திற்கு வந்தன. மாநிலம் முழுவதும் யானைகள் இறந்தது குறித்து விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பல பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன." என்று கூறினார். அவரது கணிப்பில் எத்தனை யானைகளின் இறப்பு பதிவில் வரவில்லை என்பது குறித்து கேட்டபோது, அவர் சென்ற புதிதில் தரவுகள் எதுவும் சரியாக பின்பற்ற படாததாக குறிப்பிட்டார். மேலும், "2011 முதல் 2020 வரையிலான பத்தாண்டுகளில் 1000 யானைகள் இறந்துள்ளன, ஆனால் அதில் ஏறத்தாழ 200 யானைகளின் இறப்பு பதிவில் வரவில்லை. பதிவு செய்ய பட்ட வழக்குகளிலும் பல வழக்குகளுக்கு முறையான விசாரணையோ, பாற்சோதனையோ நடைபெறவில்லை, வெறுமனே எல்லா யானைகளுக்கு இயற்கை மரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 2019ல் ஒரு ஆண் யானை இறந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் புகைப்படத்தில் பார்த்தால் அது பெண் யானையாக இருக்கிறது. இப்போதுதான் மதுரை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது," என்று கூறியிருக்கிறார்.
இதற்காக வனத்துறையால் செய்ய முடிந்தது என்ன என்று கேட்டபோது, "கடந்த பத்து வருடங்களில் இறந்த யானைகள் பற்றிய அனைத்து வழக்குகளும் மீண்டும் விசாரிக்கப் பட வேண்டும். யானையின் தந்தத்திற்கு இவ்வளவு டிமாண்ட் உள்ளது என்று தெரிந்தும் அவற்றை அலட்சியமாக கையாண்டது மிகவும் தவறு. நம்மால் இப்போது மீண்டும் இறந்த யானைக்கு பிரேத பரிசோதனையோ, டிஎன்ஏ டெஸ்ட்டோ எடுக்க முடியாது. அதனால் ஒவ்வொரு யானையின் இறப்பையும் எப்படி இயற்கையான மரணம் என்று குறிப்பிட முடியும் என்பதற்கான நியாயமான காரணங்களை குறிப்பிட வேண்டும். எனக்கு தெரிந்து இந்த விசாரணையில் பெரும்பாலான வழக்குகள் தந்தத்திற்காக கொல்லப்பட்டதாக இருக்கும்.
இனி வரும் காலங்களில், விளங்குகளுக்கான மருத்துவர்களை பிரத்யேகமாக நியமிக்க வேண்டும், காடுகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். அப்போது தான் யானைகளின் இனத்தை காப்பாற்ற முடியும். இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும், தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை ஓரளவுக்கு அதிகமாக இருந்தாலும், அவற்றின் தேவை சுற்றுசூழலுக்கு அவசியம் என்பதால் அதனை பாதுகாக்கும் இடத்தில் உள்ளோம் என்றார்.