TN Weather Update: 4 மாவட்டங்களில் சதம் அடித்த வெப்பநிலை.. இன்று எப்படி இருக்கும்? வானிலை அப்டேட் இதோ..
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக வெப்ப சலனம் காரணமாக ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. ஆனால் அநேக இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
23.05.2023 முதல் 26.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை :
22.05.2023 மற்றும் 23.05.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் கீழ் தான் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வேலூரில் 38.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல் திருச்சியில் – 38.5 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தி – 38.5 டிகிரி செல்சியஸ், ஈரோடு – 38.2 டிகிரி செல்சியஸ், மதுரையில் – 37.7 டிகிரி செல்சியஸ், திருத்தணி – 37.5 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூர் – 37.6 டிகிரி செல்சியஸ், சேலம் – 37.3 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டை – 37.4 டிகிரி செல்சியஸ், பரங்கிப்பேட்டை – 36.5 டிகிரி செல்சியஸ், நாகை – 36.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 36.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நுங்கம்பாக்கத்தில் 35.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல் நேற்று நகரில் ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவானது. இன்றும் தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் குறைவாக தான் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயிலின் போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் அதாவது ஒரு சில மாவட்டங்களில் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடக்கத்திலிருந்தே நல்ல மழை பதிவாகி வருகிறது. மேலும் அதிகபட்ச வெப்பநிலையும் குறைவாகவே உள்ளது. ஆனால் வெயிலினால் ஏற்படும் உஷ்னம் அதிகமாக உணரப்படுகிறது.