CM Stalin Speech: ”ரூ.1000-ற்கு குவிந்த மனுக்களை கண்டு நானே பயந்தேன்” - கொளத்தூரில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
CM Stalin Speech: குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்க முடியுமா? என நிதி நெருக்கடியை பார்த்து நானே பயந்தேன், என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
CM Stalin Speech: சென்னை கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
நலத்திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர்:
சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன்படி, பல்லவன் சாலையில் 3.3 கோடி மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள செயற்கை புல் தரையுடன் (Astro Turf) கூடிய கால்பந்து விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்து பார்வையிட்டு உபகரணங்களை வழங்கினார். அதனை தொடர்ந்து திரு.வி.க. நகர் எட்டாவது தெருவில் 54 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டுத் திடலை திறந்து வைத்தார்.
கண் மருத்துவமனை:
பின்னர் ஜவகர் நகர் 1வது சர்குலர் சாலையில் புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தில் கலைஞர் நூற்றாண்டு கட்டணமில்லா உயர் சிகிச்சையுடன் கூடிய கண் மருத்துவமனையை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் 55 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவி தொகை, தையல் இயந்திரம், காது கேட்கும் கருவி போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் வி.வி நகர் 1ஆவது தெருவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 36 புதிய மற்றும் பல்வேறு புனரமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, ஜி.கே.எம். காலனி, ஜம்புலிங்கம் பிரதான சாலையில் அமைந்துள்ள மைதானத்தில் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார். நிகழ்வில் 600 நபர்களுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது. பின்னர் அவர்களுடன் இணைந்து முதல்வர் மு க ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்து கொண்டார்.
முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு:
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “கொளத்தூர் தொகுதிக்கு ஒவ்வொரு முறை வரும் போதும் புத்துணர்வு பெறுகிறேன். அரசு நிகழ்ச்சிகளில் இன்று நாம் இருப்பதற்கு காரணம் கழகம் தான் என்பதை மறந்துவிடக் கூடாது. கட்சியால் தான் ஆட்சி. முதலமைச்சராக இந்த தொகுதிக்குள் உள்ளே நுழைந்த காலத்தில் மனுக்கள் குவியும். நான் கூட பயந்தேன். ஆனால் இன்று மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் மனுக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்க முடியுமா என நிதி நெருக்கடியை பார்த்து நானே பயந்தேன். ஆனால் நிதி நெருக்கடியை ஓரளவிற்கு சரிசெய்து அறிவித்த நாளுக்கு ஒரு நாள் முன்னரே குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்பினோம். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் 1896 கோரிக்கைகள் வந்திருக்கிறது. அவற்றில் இந்தாண்டு 782 பணிகள் நிறைவேற்ற உள்ளோம். வரும் ஆண்டுகளில் 203 பணிகள் நிறைவேற்ற 5091 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
”திமுக திட்டத்தை பாராட்டிய செங்கோட்டையன்”
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இத்திட்டத்தை பாராட்டி இருக்கிறார். அவர் பெயரை வெளிப்படையாக சொன்னால் அவருக்கு பிரச்சினை வரும். ஆனால் ஏற்கனவே அவர் பெயர் தெரிந்ததால் சொல்கிறேன். கட்சி முன்னோடிகளுக்கு உரிய மரியாதையை வழங்குவதால் உதயநிதியை பாராட்டுகிறேன். உதயநிதி அமைச்சராக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
அவர் எந்த மாவட்டத்திற்கு நிகழ்ச்சிக்கு செல்வதாக இருந்தாலும் அங்கே கட்சி மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கக்கூடிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய சொல்லி அப்படி ஏற்பாடு செய்தால் மட்டுமே அந்த நிகழ்ச்சிகளுக்கு செல்கிறார். அவர் என் மகன் என்பதற்காக மட்டும் நான் அவரை பாராட்டவில்லை. கட்சிப் பாகுபாடு இல்லாமல் அரசியல் நோக்கத்தை எண்ணி பார்க்காமல் மக்கள் நலனை ஒன்றை மட்டுமே நோக்கமாக கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது” என முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.