முனியாண்டி விசிலுக்கு முயலெடுக்கப் பாயும் “கருஞ்செவல” ... நாய்களை பற்றி தெரியவேண்டுமா உங்களுக்கு ?
பலதரப்பட்ட வேட்டையடிகளின் வாய்மொழிகள், வெள்ளைத் தோல்காரர்களின் நூற்றுக்கணக்கான குறிப்புகள், அக்குறிப்புகளில் உள்ள முரண்கள். மாறிமாறி நடந்த கலப்புகள். அதன் வழியே புத்துயிர் பெற்ற இனங்கள் அவற்றோடு தன் வாழ்வை இணைத்துக் கொண்ட மக்கள் என பல நூறு மைல் தூரமும் பல நூறு ஆண்டுகாலமும் ஒன்றோடு ஒன்று ஊடுபாவ பின்னிய வரலாற்றை அறிய இங்கு இருந்து துவங்குவோம்
வேட்டைத் துணைவன்
ஆதியில் வேட்டையடியாக அறியப்பட்ட ஓரினம் தன் உணவுத் தேவை பொருட்டு பிற உயிர்களைக் கொன்று பெரும்போர் ஒன்றைத் துவங்கியது. உணவுக்காக தன் உடலாற்றலில் பெருமளவை இழந்து பின் அதே உணவால் இழந்ததை மீட்கவும் செய்தது. அந்த இனம் உயிர் – உடல் தேவைக்காகக் கூடி வாழத்தலைபட்டது. தன்னையும் தன் கூட்டத்தையும் அதன் உடைமைகளையும் காபந்து செய்ய முயற்சித்தது. லட்சம் ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த மேற்கூறிய போரின் ஒரு கட்டத்தில் வேட்டையாடி இனம் தனக்குத் தோதான பங்காளனை குறிப்பறிந்துகொண்டது. ஒவ்வொரு நாளும் அதனுடன் தன்னுடைய பிணைப்பை வலுப்படுத்திக்கொண்டது. தன்னுடைய உணவையும் உறைவிடத்தையும் அதனோடு பகிர்ந்துகொண்டது. இன்றைய தேதியில் அந்த வேட்டையாடி இனம் மனிதனாகவும் அது கண்டுணர்ந்த வேட்டை பங்காளன் நாய்களாகவும் அறியப்படுகிறது.
வரலாறு நெடுகிலும் நாம் அறிவது நாய்கள், “பயன்பாட்டு விலங்குகள்” என்பதைத்தான். அந்தப் பங்களிப்பே மனிதர்களிடத்தில் நாய்களை நெருக்கமாக்கியது. வேட்டையாடுதல் குறைந்து, வேளாண்மை பெருகி, வர்த்தகம் வளர்ந்த ஒரு நாளில்தான் நாய்கள் செல்லப்பிராணிகளாக மாறுகின்றன. இன்று உலகம் முழுவதிலும் இருநூறுக்கும் மேட்பட்ட நாய் இனங்கள் காணக்கிடைக்கின்றன. அவைகளில் பெரும்பாலானவை கடந்த மூன்று நூற்றாண்டுகளில் உருவானவை என்றால் உங்களால் நம்ப முடியுமா?
ஆம் ! உலகறிந்த “டாபர்மேன்” இனம் கூட லூயில் டாபர்மேன் என்ற ஜெர்மானியர் ஒருவரால் உருவாக்கப் பட்டதுதான். இவ்வாறான சமீபத்திய நாய் இனங்கள் தவிர மீதமுள்ள புராதனமான நாய் இனங்களை “land race dogs” என்று அழைப்பர். பழங்குடிகளாலும், மேச்சல் வேளான்மை சமூகத்தாராலும் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு பரவிய நாய் இனங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது .
“பெடோயின்” பழங்குடிகளின் சமிக்கைக்கு அரேபியச் சுடுமணலில் கால் பதிய ஓடும் “சலுக்கி” வகை நாய்களுக்கும். தமிழகத்தின் தென்கோடி கரிசலிலில் முனியாண்டி விசிலுக்கு முயலெடுக்கப் பாயும் “கருஞ்செவல” நிற வேட்டை நாயிக்கும் உதிரத் தொடர்பு உண்டு. எகிப்த்திய ஓவியங்களில் காணக்கிடைக்கும் கூர் முக அமைப்பு கொண்ட நாய் படங்களுக்கும், பாஞ்சாலாங்குறிச்சியில் முழி திரட்டி திரியும் பொடித்தலை நாய்க்கும் ஒரு பிணைப்பு உண்டு. வெறுமனே நாய்கள் என்ற பொதுப்படையான தன்மையைத் தாண்டி இத்தொடர்பு இறுக்கமானது என்பதை நீங்கள் இப்போது உணர்ந்திருக்கக் கூடும்.
அத்தொடர்பு எத்தகையது? அதன் முக்கியத்துவம் என்ன? இன்றைய தமிழக இனங்களை அறிய அது எந்த அளவுக்கு அவசியம். நம்முடைய நாயினங்கள் எவை? அவைகளின் கதையென்ன? நமது மரபில் நாய்களுக்கான இடம் எத்தகையது? என்ற கேள்விகளுக்கான விடை ஒரு புள்ளியில் துடங்கி ஒரு புள்ளியில் முடிவதல்ல. பலதரப்பட்ட வேட்டையடிகளின் வாய்மொழிகள், வெள்ளைத் தோல்காரர்களின் நூற்றுக்கணக்கான குறிப்புகள், அக்குறிப்புகளில் உள்ள முரண்கள். மாறிமாறி நடந்த கலப்புகள். அதன் வழியே புத்துயிர் பெற்ற இனங்கள் அவற்றோடு தன் வாழ்வை இணைத்துக் கொண்ட மக்கள் என பல நூறு மைல் தூரமும் பல நூறு ஆண்டுகாலமும் ஒன்றோடு ஒன்று ஊடுபாவ பின்னிய வரலாற்றை அறிய இங்கு இருந்து துவங்குவோம்.
இனி ஒவ்வொரு திங்கள்கிழமையும் வெளியாகவுள்ள இத்தொடரின் மூலம் நாய்களின் வரலாற்றையும் முக்கியத்துவத்தையும் அதன் பின்னணியையும், பிரத்யேகத்தையும் அறிந்துகொள்ளுங்கள் !