Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Rain Update: தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Rain Update: தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் எங்கெல்லாம் கனமழை பெய்யக்கூடும் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
வானிலை மையம் எச்சரிக்கை:
தமிழ்நாட்டில் வழக்கத்திற்கு மாறாக கோடை காலத்திற்கு நிகராக, கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக வடமாவட்டங்களில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த வகையில் இன்றும் தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களில் கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக, மண்டல வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே, பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு தங்களது பணிகளுக்கான திட்டங்களை வகுத்துக் கொள்வது நல்லது.
இன்று எங்கெல்லாம் மழை பொழியும்?
மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (28.09.2024) மாநிலத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானமழை பெய்யக்கூடும்.
19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை மழைக்கு வாய்ப்பா?
நாளை (29.09.2024) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
30.09.2024 முதல் 03.10.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என சென்னை மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.