கள்ளக்குறிச்சி மாணவி உடல் மறுகூராய்வுக்கு உத்தரவு.. தந்தையும் உடனிருக்கலாம் - நீதிமன்றம் உத்தரவு
மறுகூராய்வு முடிந்த பிறகு மாணவியின் உடலை எந்தவித எதிர்ப்புமின்றி பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் மறு உடல் கூராய்வு மனு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாவூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் நேற்று பள்ளி அருகே சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சி செய்த நிலையில் போராட்டம் சிறிது நேரத்தில் வன்முறையாக மாறியது. காவல்துறை வாகனத்தை கவிழ்க்க போராட்டக்காரர்கள் முயற்சித்த நிலையில் பள்ளி மீது தாக்குதல் நடத்தினர். பள்ளியில் இருந்த பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேலும் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கிய போராட்டகாரர்கள் பெஞ்ச் உள்ளிட்ட பொருட்களை தூக்கி சென்றனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பின்னர் நேற்று மாலை வன்முறை நடைபெற்ற இடங்களை உள்துறைச் செயலாளர் பணீந்தர் ரெட்டியும், காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபுவும் பார்வையிட்டனர். இதனிடையே தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாக தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
அப்போது பேசிய நீதிபதி, கள்ளக்குறிச்சி சம்பவம் திட்டமிட்ட வன்முறை போல் தெரிகிறது என்றும், இதன் பின்னணியில் இருப்பது யார் என்றும் சரமாரியாக கேள்வியெழுப்பினார். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் சிறப்பு படை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்களிடம் ஏற்பட்ட இழப்பீடை வசூலிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். அதேசமயம் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஜூலை 29ம் தேதி போலீஸ் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
மாணவி ஸ்ரீமதி உடலை மறு கூராய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற நீதிபதி 3 மருத்துவர்கள் கொண்ட குழு மறு கூராய்வு செய்யலாம் என்றும், வழக்கறிஞருடன் மாணவியின் தந்தை மறு உடல் கூராய்வின் போது உடனிருக்கலாம் என்றும், இதனை முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
அதேசமயம் மறுகூராய்வு முடிந்த பிறகு மாணவியின் உடலை எந்தவித எதிர்ப்புமின்றி பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், இறுதிச் சடங்குகள் அமைதியாக நடத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் வருங்காலத்தில் கல்வி நிறுவனங்களில் மரணங்கள் நிகழும் போதெல்லாம், சிபிசிஐடி மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்