(Source: ECI/ABP News/ABP Majha)
காலையிலேயே சோகம்.. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட ஒன்றரை வயது குழந்தை மரணம்..
தவறான சிகிச்சையால் கை அகற்றப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட விவகாரத்தில் சிகிச்சைப் பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது.
தவறான சிகிச்சையால் கை அகற்றப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட விவகாரத்தில் சிகிச்சைப் பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது.
தமிழ்நாட்டை அதிர வைத்த சம்பவம்
தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகள் முந்தைய காலத்தை விட தற்போது தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனாலும் அவ்வப்போது அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்படுகிறது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மீது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர் சொன்ன குற்றச்சாட்டு தமிழ்நாட்டை அதிரவைத்தது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தஸ்தகீர் - அஜீசா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களின் ஒன்றரை வயது ஆண் குழந்தை முஹம்மது மகிர் 1.5 கிலோ எடையில் பிறந்தது. ஆனால் ஒன்றரை வயதான நிலையில் குழந்தை மகிருக்கு தொடர்ச்சியாக பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டன. இதனால் எழும்பூரில் இருக்கும் குழந்தைகள் நல மருத்துவமனையில் கடந்தாண்டு அனுமதிக்கப்பட்டது.
அகற்றப்பட்ட குழந்தையின் கை
பின்னர் ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனைக்கு ஜூன் மாதம் குழந்தை மாற்றப்பட்டது. அங்கு குழந்தையின் தலையில் இருக்கும் நீரை வெளியேற்ற அறுவை சிகிச்சை செய்து வயிற்றுக்கும் தலைக்கும் இடையே ஒரு குழாய் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால் இந்த குழாய் ஆசன வாய் வழியாக வெளியே வரவே மீண்டும் ஜூன் 29 ஆம் தேதி மீண்டும் ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. அன்று இரவே அறுவை சிகிச்சை செய்து மீண்டும் குழாய் பொருத்தப்பட்டது.
இதனிடையே குழந்தை மகிருக்கு மருந்து மற்றும் திரவமாக உணவு கொடுக்க வலது கையில் ஊசி பொருத்தப்பட்டது. ஆனால் அடுத்த சில மணி நேரத்தில் கை நிறம் மாற தொடங்கியதால் உடனடியாக பெற்றோர்கள் மருத்துவர்களை அழைத்துள்ளனர். பரிசோதனையில் இரத்தம் ஓட்டம் தடைபட்டது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து வலது கை அகற்றப்பட்டது. ஆனால் தஸ்தகீர் - அஜீசா தம்பதியினர் தவறான சிகிச்சையால் கை அகற்றப்பட்டதாக குற்றம் சாட்டினர். இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பியது. எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தில் கண்டனம் தெரிவித்தனர்.
குழந்தை மரணம்
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதுதொடர்பாக விளக்கம் கொடுத்தார். மேலும் விசாரணைக்குழு அமைத்து மருத்துவர்கள், செவிலியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.இதன்பின்னர் குழந்தை மகிர் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். ஆனால் குழந்தையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இன்று காலை குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.