“ஜோதிமணிக்கு ஸ்கூட்டரில் லிஃப்ட் கிடைக்கவில்லை... அதனால்தான்...” - ஹெச். ராஜா
பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத சூழ்நிலையில், சட்ட ஒழுங்கை மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றுவதற்கான விவாதங்கள் தொடங்கியுள்ளதாக கரூரில் ஹெச். ராஜா கூறினார்.
பஞ்சாப் மாநிலம் சென்ற பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகளைக் கண்டித்து கரூர் திண்ணப்பா கார்னர் அருகே பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது கரூர் காவல் ஆய்வாளர் செந்தூர் பாண்டியன் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்று கூறி கட்சியினரை கைது செய்தார்.
இதனை கண்டிக்கும் விதமாகவும், பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்தும் மீண்டும் இன்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா கலந்து கொண்டு காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும், கரூர் காவல் ஆய்வாளருக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதேபோல் தமிழ்நாட்டிற்கு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வரும் போது கோபேக் மோடி என்ற கருப்பு பலூன் விட்டவர்கள் தான் தற்போது தமிழ் நாட்டை ஆண்டு கொண்டு வருகின்றனர் எனத் தெரிவித்தார்.
மேலும், பஞ்சாப் மாநில அரசு குறித்தும், தமிழ்நாடு அரசு குறித்தும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பி காரசாரமாக பேசினார்.
ஜோதிமணியை கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். கடந்த மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிகழ்வு குறித்து பேசிய அவர், “ஸ்கூட்டரில் லிஃப்ட் கிடைக்கவில்லை. ஆகவே, தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்” எனத் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 300 நபர்கள் கலந்துகொண்டு பதாகைகள் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினர். காலதாமதமாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணி நேரம் கழித்து அதன் தொடர்ச்சியாக கண்டன கோஷங்கள் உடன் நிறைவு பெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச். ராஜா, பஞ்சாபில் நலத் திட்டங்களை துவக்கி வைக்க சென்ற பிரதமருக்கு பாதுகாப்பு அம்சத்தில் ஏற்பட்ட பின்னடைவு பாதுகாப்பு குளறுபடி என்று மட்டும் சொல்ல முடியாது. இது பஞ்சாப் அரசின், காங்கிரஸ் கட்சியின் தலைமையின் திட்டமிட்ட சதி என சொல்வதற்கு முகாந்தரம் உள்ளது. பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத சூழ்நிலையில், சட்ட ஒழுங்கை மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றுவதற்கான விவாதங்கள் தொடங்கியுள்ளது. இது அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும். தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும், வெள்ள நிவாரண பணிகள் மேற்கொள்வதிலும் திமுக அரசு தோல்வி அடைந்துள்ளது. இன்றைக்கு தேர்தல் வைத்தாலும் திமுக படுதோல்வி அடைவது உறுதி.
கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
வெளி மாநிலத்தில் உள்ள முதலாளிகளிடமிருந்து கமிஷன் வாங்கவே பொங்கல் பொருள்கள் வெளிமாநிலத்தில் இருந்து வாங்கப்பட்டுள்ளன. பொங்கலுக்கு வழங்கப்பட்ட பொருட்களில் உள்ள புளியில் பல்லி உள்ளது. பொருட்கள் அனைத்தும் தரமற்ற வகையில் பேக்கிங் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.