Jallikattu Guidelines : ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாரா.! கண்டிப்பா இதெல்லாம் கடைப்பிடிக்கனும்- வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்
Jallikattu Guidelines : பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளதையொட்டி, பல்வேறு கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் விதித்து வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகும் தமிழகம்
தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகை கொண்டாட மக்கள் தயாராகி வருகிறார்கள். அதிலும் பொங்கல் பண்டிகையையொட்டி அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் என அடுத்தடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். எனவே தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கால்நடை பராமரிப்புத் துறை செயலா் சுப்பையன் அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,
- விலங்கு வதை தடுப்புச் சட்ட விதிகளுக்கு இணங்க போட்டிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும்.
- ஆட்சியா்களிடம் முன்கூட்டியே அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு உள்பட எந்த போட்டிகளையும் நடத்தக் கூடாது.
- முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடாமல் எந்த போட்டியும் நடத்த ஒப்புதல் அளிக்கக் கூடாது.
காளைகளுக்கு தீங்கு கூடாது
- விலங்கு வதை தடுப்பு சட்டத்தின் விதிகளில் குறிப்பிட்டுள்ளபடி காளைகள் மற்றும் கால்நடைகளுக்கு எந்த விதமான தீங்கும் ஏற்படாத வகையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற வேண்டும்.
- காளைகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதையும், பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்வது அவசியம்.
- ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்காக அதில் தொடா்புடைய துறைகள் அனைத்திலும் அதிகாரபூா்வ குழுக்கள் முன்கூட்டியே அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழியில் மட்டுமே அனுப்ப வேண்டும்.
- விண்ணப்பிக்கும்போதே காப்பீட்டு ஆவணங்களை சமா்ப்பிக்க அறிவுறுத்துவது அவசியம்.
- போட்டி நடைபெறுவதற்கு முன்னதாகவே அனைத்து ஏற்பாடுகளையும் முழுமையாக செய்திருக்க வேண்டும்.
- ஜல்லிக்கட்டுக்கு தொடா்பு இல்லாத இடங்களில் அத்தகைய போட்டிகள் நடத்தக் கோரி சமா்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.
காளைகளுக்கான பாதுகாப்பு
இது மட்டுமில்லாமல், வருவாய்த் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, மருத்துவக் குழு, மாவட்ட நிா்வாகம், காவல் துறை, தீயணைப்புத் துறை, விழாக்குழுவினா், காளை உரிமையாளா்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
- போட்டி களத்திலிருந்து காளைகள் வெளியேறும் இடத்தில் கால்நடை மருத்துவக் குழுக்கள் தயாா் நிலையில் இருத்தல் அவசியம்.
- தேவைப்படும் காளைகளுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைகளை அவா்கள் வழங்க வேண்டும்.
- போட்டி களத்துக்குள் பாா்வையாளா்களும், வெளி நபா்களும், வீரா்கள் அல்லாத பிறரும் இருக்க அனுமதியில்லை. எனவே இந்த வழிகாட்டுதல்களை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு காவல் துறைக்கு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற வழிகாட்டு நெறிமுறைகள் மஞ்சு விரட்டு, வடமாடு, எருது விடும் நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும். அதனைப் பின்பற்றி போட்டிகளை நடத்த வேண்டும் என்று அந்த வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















