எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கைத் தேவைப்பட்டால் மீண்டும் விசாரிப்போம் - நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
உள்ளாட்சித்துறையின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கைத் தேவைப்பட்டால் மீண்டும் விசாரிப்போம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் எஸ்.பி.வேலுமணி. இவர், உள்ளாட்சிததுறை அமைச்சராக பொறுப்பு வகித்தபோது ஒப்பந்தங்களில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, தி.மு.க. சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும், அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் வெங்கடேசனும் சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணை கடந்த ஜூன் 21-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக தலைமை நீதிபதி சஞ்சீப்பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் அமர்வு ஒத்திவைத்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசின் சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கை தேவைப்பட்டால் மீண்டும் விசாரிப்போம் என்றும், சி.ஏ.ஜி. அறிக்கையில் கூட டெண்டர்கள் தொடர்பான முறைகேடுகளை கோடிட்டு காட்டப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தபோது சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் வழங்கப்பட்ட 220 ஒப்பந்தங்களில் முறைகேடு நடைபெற்றதாகவும், இதுதொடர்பாக நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று வழக்குத் தொடரப்பட்டது.
சட்டசபை தேர்தலுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சட்டசபை தேர்தல் காரணமாக இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 21-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பில், இந்த புகார் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை நிறைவு பெற்றுள்ளதாகவும், அதில் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று முதல்வர், அமைச்சரவை, தலைமை செயலாளருக்கு அறிக்கை அனுப்பியதாகவும், அதை அவர்கள் ஏற்றுக்கொண்டதால் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
ஆனால், மனுதாரர் தரப்பில் ஆரம்பகட்ட விசாரணை நிறைவு பெற்றாலும், அமைச்சருக்கு நற்சான்று அளிக்கப்படவில்லை என்றும் இந்த வழக்கை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் நிறைய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை தயார் செய்ய வேண்டியிருப்பதால் போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், எஸ்.பி.வேலுமணி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகில் ரோகித்ஹி ஏற்கனவே அ,தி.மு.க. அரசு சிறப்பு அதிகாரியை நியமித்து விசாரணை நடத்தியதில் எந்த குற்றச்சாட்டும் இல்லை எனவும், இந்த விசாரணை அறிக்கையை அ.தி.மு.க. அரசு ஏற்றுக்கொண்டதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கை விரிவாக விசாரிக்க 4 வாரங்கள் நீதிபதிகள் ஒத்திவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.