OBC பிரிவினருக்கு சாதிச்சான்று : ஊதியம், வேளாண் வருவாயை கணக்கில்கொள்ள வேண்டாம் - தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை
ஓபிசி பிரிவினருக்கு சாதி சான்றிதழ் வழங்க ஊதியம் மற்றும் வேளாண் வருமானத்தை கணக்கில் கொள்ள வேண்டாம் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
ஓபிசி பிரிவினருக்கு சாதிச்சான்று வழங்கும்போது ஊதியம் மற்றும் வேளாண் வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் கார்த்திக் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
இந்திய அரசுப்பணி மற்றும் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த பிரிவினருக்கான சாதி சான்றிதழை வழங்கும்போது ஊதியம், வேளாண் வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என மத்திய அரசின் சார்பில் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தாலும், அது முறையாக பின்பற்றப்படுவதில்லை என்பதால், மீண்டும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இதன்படி, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி ஆண்டு வருமானம் ஒரு லட்சம் முதல் எட்டு லட்சம் வரை ஆண்டு வருமானம் இருந்தாலும் அப்பிரிவினருக்கு சாதி சான்றிதழை ஊதியம் மற்றும் வேளாண் வருவாயை கணக்கில்கொள்ளாமல் காலதாமதமின்றி வழங்கவேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.