Budget 2025 : குட் நியூஸ் மக்களே ! கோவை - சத்தியமங்கலம் இடையே ரூ.1912 கோடியில் 4 வழி பசுமை சாலை
Budget 2025 : கர்நாடக மாநிலத்திற்கு முக்கிய வழித்தடமான கோவை - சத்தியமங்கலம் இடையே ரூ.1912 கோடியில் 4 வழி பசுமை சாலை பணி துவங்கியது

கர்நாடக மாநிலத்திற்கு முக்கிய வழித்தடமான கோவை - சத்தியமங்கலம் இடையே ரூ.1912 கோடியில் 4 வழி பசுமை சாலை பணி துவங்கியது.
கோவை-சத்தியமங்கலம் சாலை கர்நாடக மாநிலத்திற்கு மிக முக்கியமான வழித்தடமாக அமைந்துள்ளது. கடந்த 2010ல் இந்த தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யத் திட்டம் வகுக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடங்கி தமிழ்நாடு - கர்நாடகா எல்லை வரை பழநி, மடத்துக்குளம், உடுமலை, பொள்ளாச்சி, அன்னூர், சத்தியமங்கலம் உட்பட 10 முக்கிய நகரங்களை புறவழிச்சாலையுடன் இணைக்கும் வகையிலான சாலை விரிவாக்க பணி தொடர்பாக மக்கள் கருத்துக் கேட்பும் நடத்தப்பட்டது.
பொள்ளாச்சி- பழநி வரையிலான பணி தீவிரம்
இதில் இதுவரை கோவை - பொள்ளாச்சி வரையுள்ள ரோடு மட்டுமே நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி- பழநி வரையிலான சாலையிலும் விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது. கோவை- சத்தியமங்கலம் சாலையில் விரிவாக்க பணி நடத்தப்படவில்லை. கிழக்கு பைபாஸ் என்ற பெயரில் சூலூர், காங்கேயம் பாளையம், சரவணம்பட்டி, குரும்பாளையம், அன்னூர் பகுதியை இணைக்கும் புதிய திட்டம் 2016 அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த திட்டம் நிலம் எடுப்பு, விவசாயிகள் எதிர்ப்பினால் முடங்கியது.
பசுமை வழிப்பாதை
இந்நிலையில், பசுமை வழிப்பாதை என்ற பெயரில் கோவை - சத்தியமங்கலம் சாலை விரிவாக்க திட்டம் தொடர்பான அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டது. 96 கிமீ தூரம் உள்ள கோவை - சத்தியமங்கலம் ரோடு, 12 லிருந்து 30 மீட்டர் அகலத்தில், இரு வழிப்பாதையாக இருக்கிறது. இதை நான்கு வழிப்பாதையாக விரிவாக்கம் செய்ய வேண்டுமெனில், நிறைய கட்டிடங்களை அகற்ற வேண்டியிருக்கும். புதிதாக நிலமெடுத்து 30 முதல் 45 மீட்டர் அகலத்தில் 92 கிமீ தூரத்திற்கு நான்கு வழி பசுமைச்சாலை அமைக்க வேண்டும்.
இதையும் படிங்க: Budget 2025: தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு என்னென்ன அறிவிப்புகள்? இதோ விவரம்!
இந்த சாலை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வசமிருந்தாலும், புதிய ரோட்டை அமைக்கும் பணி, தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, மாநில நெடுஞ்சாலைத் துறையின் ஒரு பிரிவாகவுள்ள தேசிய நெடுஞ்சாலைத் துறையிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவைப்படும் நில ஆர்ஜித உத்தரவு கடந்த 2021ம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
இந்த சாலை அமைப்பதற்கு, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் அரசு நிலம் 48 ஏக்கர், தனியார் நிலம் 732 ஏக்கர் என மொத்தம் 780 ஏக்கர் நிலம் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்த மட்டுமே, ரூ.351 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டது. கொரோனா நோய் பரவலுக்கு பின் நிலமெடுப்பு பணி தள்ளிப்போனது. இப்போது நிலத்தின் மதிப்பீடு பல மடங்கு உயர்ந்து உள்ளது. நிலமெடுப்புக்கான நிதியுடன் சாலை அமைப்பதற்கு ரூ.1,345 கோடியும், சாலை அமைப்பதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு ரூ.217 கோடி தேவையும் இருந்தது.
மொத்தம் ரூ.1,912 கோடி மதிப்பில் பணிகள் நடத்த திட்டமிடப்பட்டது. கோவை மாவட்டம் அன்னூர் தாலுகாவில் 12 கிராமங்கள், திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகாவில் 2 கிராமங்கள், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் நம்பியூரில் 16 கிராமங்கள் என மொத்தம் 30 கிராமங்களில், இந்த சாலைக்காக நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது.
முதல் கட்டமாக குரும்பபாளையம் முதல் அன்னூர் வரை 40 கி.மீ தூரத்திற்கு 4 வழிப்பாதை திட்டத்திற்கு ரூ.640 கோடி ரூபாய் செலவிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்திற்கு முக்கிய வழித்தடமான கோவை - சத்தியமங்கலம் இடையே 4 வழி சாலை அமைவதால் தொழிற்சாலை மற்றும் வேளாண்மை, பொதுமக்களுக்கு சிரமமின்றி பொருட்களை எடுத்து செல்ல ஏதுவாக இருக்கும்.





















