ஜி-20 தலைமையை ஏற்றிருப்பது நமக்கு பெருமை: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
ஜி-20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று பல்வேறு முக்கிய கருத்துக்களை முன்வைத்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான ஜி-20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய உரை:
"இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் ஆகியோருக்கு வணக்கம்.
2023-ஆம் ஆண்டுக்கான ஜி-20 தலைமையை இந்தியா ஏற்றிருக்கும் வேளையில் நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு முதற்கண் எனது பாராட்டுகள். இது நம் நாட்டுக்கு மிகவும் பெருமை தரக்கூடிய ஒன்றாகும்.
உலக அளவில் பல்வேறு நாடுகளிடையே புரிதலை மேம்படுத்துவதில் நாம் மிக முக்கியப் பங்கை ஆற்ற வேண்டியுள்ளது.
ஜி-20 நாடுகள் மட்டுமல்லாமல் அனைத்து உலக நாடுகளாலும் இந்தியா கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
'அமைதி, அகிம்சை, நல்லிணக்கம், சமத்துவம், சமநீதி' ஆகிய உயர் விழுமியங்களை உலக அளவில் கொண்டு செல்ல நமது பிரதமர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இந்தியா ஜி-20 தலைமையை ஏற்றதைத் தொடர்ந்து நடத்தப்படவுள்ள கருத்தரங்குகளுக்குத் தமிழ்நாடு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என நான் உறுதியளிக்கிறேன்.
தமிழ்நாடு அரசு பல்வேறு காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்காக இந்திய அரசு நிர்ணயித்துள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இயற்கைப் பாதுகாப்பு இயக்கங்களை நிர்வகிக்கவும், காலநிலை மாற்றத்தைக் கையாளவும் 'தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம்' என்ற பெயரில் சிறப்பு நோக்க நிறுவனத்தை (SPV) உருவாக்கியுள்ளோம்.
உலக அளவில் இந்தியா அளித்துள்ள உத்தரவாதங்களைக் காப்பாற்றுவதற்கு அனைத்து வகையிலும் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும். இந்தியாவின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றுவோம்! இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் வாய்ப்புக்காக பிரதமருக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார் முதல்வர் ஸ்டாலின்.
முன்னதாக, இக்கூட்டத்தில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஜி-20 மாநாடு குறித்து இந்தியாவிலுள்ள புகழ்பெற்ற நகரங்களில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், ஜி-20 மாநாட்டை எப்படி நடத்துவது, அதற்கான விழிப்புணர்வை எப்படி ஏற்படுத்தலாம என்பது குறித்து மாநில தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.
ஜி 20 நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, கனடா, பிரேசில், பிரான்ஸ், சீனா, இந்தியா, ஜெர்மனி, இத்தாலி, இந்தோனேசியா, கொரியா குடியரசு, ஜப்பான், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, இங்கிலாந்து, துருக்கி, அமெரிக்கா ஆகிய 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்தாண்டில், இந்தோனேசியாவில் ஜி 20 மாநாடு நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்தாண்டு ஜி-20 மாநாட்டை நடத்துவதற்கான தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.