G20 PM Modi: 'புத்தர், காந்தியின் புனித மண்ணில்..'- ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி அதிரடிப் பேச்சு; 10 முக்கிய அம்சங்கள்
புத்தர், காந்தியின் புனித மண்ணில் அடுத்த ஆண்டு ஜி20 மாநாடு நடக்கும்போது, அமைதிக்கான வலிமையான செய்தியை உலகத்துக்குத் தெரிவிக்க உள்ளோம் என்று ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புத்தர் மற்றும் காந்தியின் புனித மண்ணில் அடுத்த ஆண்டு ஜி20 மாநாடு நடக்கும்போது, அமைதிக்கான வலிமையான செய்தியை உலகத்துக்குத் தெரிவிக்க உள்ளோம் என்று ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜி20 என்பது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85%, உலகளாவிய வர்த்தகத்தில் 75% மற்றும் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்ட சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மை மன்றமாகும். ஜி 20 நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, கனடா, பிரேசில், பிரான்ஸ், சீனா, இந்தியா, ஜெர்மனி, இத்தாலி, இந்தோனேசியா, கொரியா குடியரசு, ஜப்பான், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, இங்கிலாந்து, துருக்கி, அமெரிக்கா ஆகிய 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த மன்றத்தின் உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்று வருகிறது. இந்த ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.
போர் நிறுத்தத்தின் அவசியம், அமைதி குறித்தும் உணவு சங்கிலி மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும் பிரதமர் மோடி விரிவாக உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியவற்றின் 10 முக்கிய அம்சங்கள்:
’’1. உக்ரைனில் போர் நிறுத்தத்துக்கான தீர்வை நோக்கி நாம் பயணிக்க வேண்டும் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.
2. உலகத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிசெய்ய உறுதியான மற்றும் கூட்டுத் தீர்மானத்தை முன்னெடுப்பது இப்போதைய அவசியத் தேவையாகும்.
3. புத்தர் மற்றும் காந்தியின் புனித மண்ணில் அடுத்த ஆண்டு ஜி20 மாநாடு நடக்கும்போது, அமைதிக்கான வலிமையான செய்தியை உலகத்துக்குத் தெரிவிக்க உள்ளோம்.
4. சர்வதேச அளவில் விநியோகச் சங்கிலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதுமே அத்தியாவசியப் பொருட்கள், அவசியத் தேவைகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
5. ஒவ்வொரு நாட்டிலும் ஏழைக் குடிமக்கள் வாழ்வதே சவாலாக உள்ளது. பிரச்சினைகளை சமாளிக்க அவர்களுக்குப் போதிய நிதித் திறன் இருப்பதில்லை.
6. இன்றைய உரத் தட்டுப்பாடு, நாளைய உணவுக்குப் பிரச்சினையாக இருக்கும். இதற்கு உலகில் தீர்வே கிடையாது. உரங்கள் மற்றும் உணவு தானியங்கள் ஆகிய இரண்டின் சீரான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட விநியோகச் சங்கிலியைப் பராமரிக்க, இரு தரப்பிலும் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டியது அவசியம்.
7. கொரோனாவுக்குப் பிந்தைய புதிய உலகை உருவாக்குவதற்கான பொறுப்பு நம்மிடம் உள்ளது. உலகத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிசெய்ய உறுதியான மற்றும் கூட்டுத் தீர்மானத்தை முன்னெடுப்பது இப்போதைய அவசியத் தேவையாகும்.
8. உலகளாவிய பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை சிறு தானியங்கள் தீர்த்து வைக்கும். நாம் அனைவருக்கும் சர்வதேச சிறு தானிய ஆண்டை அடுத்த ஆண்டு கண்டிப்பாகக் கொண்டாட வேண்டும்.
9. ஆற்றல் சந்தையில், அவற்றின் விநியோகம் தடைப்படாமல் இருப்பதை நாம் (உலக நாடுகள்) அனைவரும் உறுதிசெய்ய வேண்டும்.
10. இந்தியாவின் ஜி20 தலைமையின்போது, இந்த விவகாரங்கள் அனைத்திலும் உலகளாவிய அளவில் ஒருமித்த கருத்து ஏற்படுவதை நோக்கி, உழைப்போம்’’.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பொதுவாக ஜி-20 தலைவர் பதவி என்பது எந்த நாட்டில் ஜி20 மாநாடு நடைபெறுகிறதோ அந்த நாட்டுக்கு ஜி20 Presidency பதவி தற்காலிகமாக அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில வருகிற டிசம்பர் 1 முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி வரை இந்தியாவுக்கு ஜி 20 தலைமைப் பதவி கிடைக்க இருக்கிறது.
அதாவது இந்தியாவில் ஜி-20 மாநாடுகள் பல முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளன. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஜி20 தலைமைக்கான இலச்சினை, கருத்துரு மற்றும் இணையதளத்தை நவம்பர் 8ஆம் தேதி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.