Freedom Fighter Anjalai Amma: தென்னாட்டு ஜான்சி ராணி...அஞ்சலை அம்மாள் சிலையை திறந்து வைத்த முதல்வர்!
சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளின் உருவச்சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 2) திறந்து வைத்தார்.
இந்திய சுதந்திரத்திற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் பாடுபட்டுள்ளனர். அதில் மிக முக்கியமானவர் அஞ்சலை அம்மாள். இவருக்கு இன்று சிலை திறந்து வைத்திருக்கிறார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்.
யார் இந்த அஞ்சலை அம்மாள்:
முத்துமணி மற்றும் அம்மாக்கண்ணு தம்பதிக்கு கடந்த 1890 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி பிறந்தவர் அஞ்சலை அம்மாள். கடலூரில் பிறந்த இவர் பெண்களுக்கான கல்வி மறுக்கப்பட்ட அந்த காலக்கட்டத்திலேயே 5 ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றவர்.
சிறுவயதிலேயே போராட்டம்:
ஆங்கிலேய அரசின் கடும் அடக்குமுறைகளுக்கு எதிராக சிறுவயதியேலே பல போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார் அஞ்சலை அம்மாள்.
பாராட்டிய பாரதி:
சிறுவயது முதல் பல்வேறு விதாமன போராட்டங்களில் ஈடுபட்டு வந்த அஞ்சலை அம்மாளை மகாகவி பாரதியார் புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு வந்து நேரடியாக பாராட்டி இருக்கிறார்.
தென்னாட்டு ஜான்சி ராணி என்று புகழ்ந்த காந்தி:
தேச விடுதலைக்காக போராட்டங்கள் தீவிரமாக நாடுமுழுவதும் நடைபெற்ற சூழலில் , 1934 ஆம் ஆண்டு காந்தி தமிழ்நாட்டில் உள்ள கடலூருக்கு வருகை தந்தார். ஆனால், அவரைச் சந்திக்க செல்லக்கூடாது என்று ஆங்கிலேய அரசு அஞ்சலை அம்மாளுக்கு தடை விதித்தது.
ஆங்கிலேய அரசின் அந்த தடையை எல்லாம் துச்சம் என எண்ணி மாறுவேடமிட்டு காந்தியை சந்தித்தார் அஞ்சலை அம்மாள். அதோடு காந்தியை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்தார். தன்னை சந்தித்த அஞ்சலை அம்மாளை, தென்னாட்டு ’ஜான்சி ராணி’ என்று புகழ்ந்தார் காந்தி.
அதேபோல் வேலூரில் உள்ள சிறையில் தன்னுடைய 9-வயது மகள் அம்மாக்கண்ணு உடன் சிறையில் இருந்த போது காந்தி சிறைக்கு சென்று இவரை சந்தித்துள்ளார். அதோடு, அஞ்சலை அம்மாளின் மகளை தன்னுடன் அழைத்துச் சென்ற காந்தி, வார்தாவில் உள்ள ஆசிரமத்தில் படிக்க வைத்து, அவருக்கு லீலாவதி எனப் பெயர் சூட்டினார்.
தனது வயிற்றில் கருவை சுமந்து கொண்டே இந்திய விடுதலைக்கு போராடிய இவர், சிறை தண்டனை அனுபவித்த காலத்தில் பெற்றெடுத்த தன் மகனுக்கு ஜெயில் வீரன் என்ற பெயரைச் சூட்டியவர்.
அதோடு,ஆங்கிலேய அதிகாரி நீல் சிலையை அகற்றும் போராட்டம், மது ஒழிப்பு, அந்நியத் துணி புறக்கணிப்பு, உப்பு சத்தியாகிரகம் என பல போரட்டாங்களில் ஈடுபட்ட இவர் இந்திய விடுதலைக்குப் பிறகு மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கான பல நல்ல திட்டங்களைக் கொண்டு வர கடும் முயற்சி எடுத்தார்.
புவனகிரிச் செல்லும் வீராணம் வாய்க்காலிலிருந்து கிளை வாய்க்காலை உருவாக்கி தீர்த்தாம்பாளையத்துக்கு கொண்டு வந்து அப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைத்தவர் கடந்த 1961 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி கலமானார்.
இந்நிலையில், தான் இவரது தியாகத்தை போற்றும் வகையில் சிலை வைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட சூழலில், கடலூரில் உள்ள காந்தி பூங்காவில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரப்போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளின் திருவுருவைச் சிலையை இன்று (நவம்பர் 2) காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.