Jayakumar Pressmeet: கூட்டணி என்றால் அது எங்கள் தலைமையில்தான்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்
தமிழ்நாட்டில் அதிமுக உடன் கூட்டணி என்றால் அது எங்கள் தலைமையில் தான இருக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சிலம்புச்செல்வர் மா.பொ.சிவஞானம் அவர்களின் 118வது பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை தியாகராய நகரில் உள்ள மா.பொ. சிவஞானம் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ மா.பொ.சியின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் அனைவரும் கொண்டாடும் ஒரு நாள். தமிழை வைத்து வியாபாரம் செய்யும் குடும்பங்கள், எந்தெந்த குடும்பங்கள் என்பது உங்களுக்கே தெரியும். அவர்கள் இருக்கும் நிலையில் உணர்வு பூர்வமாக தமிழுக்காக வாழ்ந்து மறைந்தவர் மா.பொ.சி.
அம்மா உணவகம் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்துள்ளது. அம்மா மினி கிளினிக் பெயர் மாற்றப்பட்டுள்ளது. அம்மா கொண்டு வந்த திட்டங்களுக்கெல்லாம் மூடுவிழா செய்யப்படுகிறது. மக்கள் இதற்கான பதிலை பாராளுமன்ற தேர்தலிலும், அடுத்து நடக்கும் சட்டமன்ற தேர்தலிலும் அளிப்பார்கள்” என தெரிவித்தார்.
கிண்டலும், கேலியும்
நேரு விளையாட்டு மைதானத்திலா ஆபரேஷன் நடத்துவது என்று மா.சுப்பிரமணியன் சொன்னது தொடர்பான கேள்விக்கு, ”மக்களின் கேள்விக்கு அமைச்சர் முறையாக பதிலளிக்க வேண்டும். பொறுப்பற்ற பதிலை சொல்லக் கூடாது. உண்மையில் அடைப்பு இருந்ததா? ஆஞ்சியோகிரம் பரிசோதனை செய்யப்பட்டதா? இப்படி மக்களின் கேள்விகளுக்கும் எங்களைப் போன்ற அரசியல் தலைவர்களின் கேள்விகளுக்கும் பதில் சொல்வது அரசின் கடமை. கிண்டலும், கேலியும் செய்யும் அமைச்சராகதான் இவர்கள் உள்ளார்கள்” என கூறினார்.
மேலும் பேசிய அவர், ”1000 ஆண்டுகள் ஆனாலும் அதிமுகவை அழிக்க முடியாது. திமுக போன்று மன்னர் பரம்பரை கிடையாது. அதிமுக ஜனநாயக இயக்கம். அதிமுக தலைமையில் தான் கூட்டணி. கூட்டணியில் இருப்பவர்கள் சில முன்மொழிவுகளை வைப்பார்கள். அதை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பதை முடிவு செய்யும் இடத்தில் இருப்பது அதிமுகதான்.
எங்கள் தலைமையில்தான் கூட்டணி
எதிர்க்கட்சி கூட்டணி நெல்லிக்காய் மூட்டை போல.. அவிழ்த்தால் சிதறிவிடும். ராகுலை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என ஆம் ஆத்மி முதலில் குரல் கொடுத்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் பல முரண்பாடுகள் இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை எங்கள் தலைமையில்தான் கூட்டணி. தேர்தல் வரும் போது அனைவரும் எங்கள் கூட்டணிக்கு வரும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. யார் என்பது சஸ்பென்ஸ். இப்போது சொல்ல முடியாது. தேர்தல் நெருங்க நெருங்க பல கட்சிகள் எங்களோடு வரும்.
வேங்கைவயல் பிரச்சினை நடந்து இத்தனை மாதங்களாகியும் இன்னும் குற்றவாளியை கண்டறியமுடியவில்லை. இப்படி இருக்கும்போது சமூக நீதிக்கும் முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு இருக்கப் போகிறது. சமூக நீதி என்றால் அதிமுகதான். விழுப்புரத்தில் கோயில் பூட்டப்பட்டுள்ளது. அதை திறக்க நடவடிக்கை எடுத்தார்களா?.. ஆனால் சமூக நீதி பற்றி மட்டும் பேசுகிறார்கள். செயலிலும் கட்ட வேண்டும்” என்று தெரிவித்தார்.
நடிகர் விஜய்தான் அடுத்த தலைமுறை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ”அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். இது பெரிய சமூத்திரம். இதில் நீந்தி வர வேண்டும். அரசியலுக்கு வருபவர்களுக்கு பொறுமை, சகிப்புத்தன்மை இருக்க வேண்டும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ஏன் இது போன்ற கருத்தை தெரிவித்தார் என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்கிறேன்” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார்.