சாதிய பாகுபாடு களைய பரிந்துரை; ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு - அண்ணாமலை இடையே இதுவரை நடந்தது என்ன?
கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடுகளை களைவதற்கு வழங்கிய பரிந்துரைகளால் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு - அண்ணாமலை இடையேயான வார்த்தை மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் சாதி, மத பாகுபாடுகளை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற பாகுபாடுகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்காக ஏராளமான கட்டுப்பாடுகளை அரசு விதித்து வருகிறது.
முன்னாள் நீதிபதி சந்துரு பரிந்துரை:
இந்த சூழலில், நாங்குநேரியில் மாணவர் சின்னதுரை மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதல் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து, கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடுகளை தடுப்பதற்கு என்ன செய்யலாம்? என்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் தமிழக அரசு ஒரு நபர் குழு அமைத்தது.
இதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தனது அறிக்கையை கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசிடம் ஒப்படைத்தார். ஆனால், தமிழக அரசிடம் முன்னாள் நீதிபதி சந்துரு வழங்கிய அறிக்கைக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், தமிழக பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் சந்துருவின் அறிக்கையை நிராகரிப்பதாகவும் தீர்மானம் போட்டிருந்தனர்.
அண்ணாமலை - முன்னாள் நீதிபதி சந்துரு மோதல்:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் இந்த செயலுக்கு முன்னாள் நீதிபதி சந்துரு கடும் கண்டனம் தெரிவித்தார். நீதிபதி சந்துரு இந்த விவகாரம் குறித்து பேசும்போது, தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இரண்டு வாரங்களுக்கு முன்பு அளித்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்று முதலமைச்சர் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அறிக்கையில் இடம்பெற்றதாக ஊடகங்களில் வெளியான சில யூகங்களின் அடிப்படையில் அண்ணாமலை பேசுகிறார் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும், 20 ஆயிரம் புத்தகங்களை படித்ததாக கூறும் அண்ணாமலை அந்த 650 பக்கங்களை கொண்ட அந்த அறிக்கையை படிக்காமலே நிராகரித்துள்ளார் என்றும், மக்கள் படித்து முன்னேறிவிடக்கூடாது என்பதற்காகவும், மக்கள் முன்னேறிவிட்டால் அவர்களை வைத்து அரசியல் செய்ய முடியாது என்பதற்காகவும் இவ்வாறு அண்ணாமலை பேசுகிறார் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
அண்ணாமலை ஆவேசம்:
முன்னாள் நீதிபதியின் சந்துருவின் இந்த குற்றச்சாட்டுக்கு தனது எக்ஸ் பக்கம் மூலமாக பதில் அளித்திருந்த அண்ணாமலை, முன்னாள் நீதிபதி சந்துரு தி,மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார் என்றும், அவர் தி.மு.க.விலே இணைந்து கொள்ளலாம் என்றும் கூறியிருந்தார்.
மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழங்கிய அறிக்கையின் பரிந்துரைகள் விவரங்கள் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டதாகவும், அந்த அறிக்கையில் உள்ள பல பரிந்துரைகள் மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றும் கூறியிருந்தார். மேலும், இந்து மாணவர்களுக்கு மட்டும் பொருந்தும் பரிந்துரையை இந்து சமய அடையாள அழிப்பாகத்தான் பார்க்க முடியுமே தவிர வேறு எந்த காரணம் கூறினாலும், அது தி.மு.க.வின் நாடகமே என்றும், மேலும் தி.மு.க.வின் கொள்கைகளை குழு அறிக்கை என்ற பெயரில் மாணவ சமுதாயத்தின் மீது திணித்தால் அதற்கான எதிர்ப்பு நிச்சயம் இருக்கும் என்றும் அண்ணாமலை கூறியிருந்தார்.
கல்வி நிறுவனங்களில் மாணவ சமுதாயத்தினரிடையே சாதிய பாகுபாடுகளை களைவதற்காக உருவாக்கப்பட்ட முன்னாள் நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளுக்கு தமிழக பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவிப்பது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.