Former DGP Rajesh das case : பாலியல் வழக்கு; முன்னாள் டிஜிபி மேல்முறையீடு
விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி மேல்முறையீட்டு மனுதாக்கல்.

விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு அப்போதைய சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ், பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, பெண் அதிகாரி அளித்தப் புகாரின்பேரில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மற்றும் அவரது உத்தரவின்பேரில், பெண் அதிகாரியின் காரை வழிமறித்து, கார் சாவியை பிடுங்கிய செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மீது, விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கடந்த மாதம் 16ஆம் தேதியன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும், செங்கல்பட்டு முன்னாள் காவல் கண்காணிப்பாளருக்கு ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்நிலையில் செங்கல்பட்டு முன்னாள் காவல் கண்காணிப்பாளர் சார்பில், கீழ் நீதிமன்றம் விதித்த தீர்ப்பை எதிர்த்து, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த மாதம் 22ஆம் தேதி மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று முன்னாள் சிறப்பு டிஜிபி சார்பில் அவரது வழக்குரைஞர்கள், மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளனர். இம்மனு மீதான விசாரணை எப்போது நடைபெறும் என்ற விவரம் பின்னர் தெரிவிக்கப்படும் என்று நீதிமன்ற வட்டாரம் தெரிவித்துள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

