ABP Nadu exclusive: வேளாண் மையத்தில் உள்ள கோ 51 ரக விதை நெல் முளைப்பு திறன் இல்லை - விவசாயிகள்
பெரணமல்லூர் வேளாண் விரிவாக்க மையத்தின் மூலம் விற்கப்பட்ட கோ 51 ரக விதை நெல் முளைக்காததால் விவசாயிகள் விதைநெல்லை திருப்பிக்கொடுத்து பணம் கேட்கின்றனர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை வரலாறு காணாத அளவில் பொழிந்தது. இந்த மழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகள், ஏரிகள் மற்றும் குளங்கள் ஆகிய நீர்நிலைகள் மழை நீரில் நிரம்பியுள்ளன. தற்போது நவரை பட்டம் என்பதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்களுடைய விலை நிலத்தில் நெல் நடவு செய்வதற்காக நிலத்தை உழுது தயார் செய்து வருகின்றனர். இந்தநிலையில் பெரணமல்லூர் பஞ்சாயத்து யூனியனில் இயங்க கூடிய வேளாண் விரிவாக்க மையத்தில் இப்பகுதியில் உள்ள 57 கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்களுக்கு வேண்டிய நெல் , மணிலா, உளுந்து போன்ற விதைகள் மற்றும் உரம் மற்றும் பூச்சிமருந்துகள் என விவசாய நிலத்திற்கு தேவையான அனைத்தையும் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் நெல் விதைப்பதற்கு பெரணமல்லூரிலுள்ள வேளாண் விரிவாக்க மையத்திற்குச் சென்று கோ 51 என்ற ரக நெல்லை ஒரு மூட்டை 50 கிலோ (சிப்பம்) வாங்கி வந்து நாற்றாங்கல் விட்டுள்ளனர். ஆனால் 3 நாட்கள் ஆகியும் நெல் முளைக்காததால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் விதை நெல்லை திருப்பிக்கொண்டுவந்து வேளாண் விரிவாக்க மைய அதிகாரியிடம் கொடுத்து பணத்தை திரும்ப கேட்டுள்ளனர்.
பணம் தர மருத்த விவசாயிகளுக்கும் வேளாண் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஒரு சில விவசாயிகளுக்கு மட்டும் பணத்தை திரும்ப செலுத்தியுள்ளனர். இன்னும் சில விவசாயிகளுக்கு பணம் தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ABP NADU குழுமத்தில் இருந்து கோ 51 ரக விதைகள் பற்றி பாதிக்கப்பட்ட விவசாயி பழனியிடம் பேசுகையில்;
நான் 2 ஏக்கர் விளைநிலம் வைத்துள்ளேன். தற்போது பருவமழை பொழிந்ததால் நெல் நடுவதற்காக பெரணமல்லூர் வேளாண் விரிவாக்க மையத்தில் சென்று 25ஆம் தேதி இரண்டு சிப்பம் நெல் மூட்டைகளை வாங்கிக்கொண்டு வந்தேன். பின்னர் அதனை முலைப்பதற்காக தண்ணீரில் 2 நாட்கள் மேலாக ஊறவைத்தேன். ஆனால் விதை நெல் முலைக்கவில்லை உடனடியாக வேளாண் அலுவலகத்திற்குச் சென்று அங்கிருந்த அனிதா என்ற அதிகாரியிடம் இது பற்றி கூறினேன். ஆனால் அவர்கள் அலட்சியமாக பதில் அளித்தவுடன் விதைநெல்லை திருப்பி வாங்கிக் கொள்ளாமல் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நீங்கள் எங்களிடம் பேசாதீர்கள் வேளாண் அதிகாரியிடம் பேசுங்கள் என்று கூறி தொலைபேசி எண்ணை கொடுத்தார். நாங்கள் விதை நெல்லை பற்றி அதிகாரியிடம் பேசும்போது எங்களிடம் அலட்சியமான பதிலை கூறிவிட்டு எங்களுடைய முளைக்காத விதை நெல்லை திரும்பப் பெற்றுக் கொண்டனர். அதற்காக அளிக்கப்பட்ட பூச்சிமருந்தை வாங்க மறுத்துவிட்டார்.
நான் இதற்கு முன்பாக தனியார் விதை கடையில் தான் சென்று விதை நெல் விதைகள் வாங்கி வருவேன். தனியார் விதை கடையை விட அரசு வேளாண் அலுவலகத்தில் விற்க கூடிய விதை குறைந்த பணம் என்பதால் வங்கினேன். ஆனால் அந்த விதை நெல் முளைக்காமல் விட்டது. இதற்காகதான் பல விவசாயிகள் அரசு வேளாண் அலுவலகத்திற்கு வராமல் தனியார் விதை கடையில் அதிக விலைக்கு வாங்கும் சூழல் உள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், பேசிய விவசாயி, “இந்த விதை நெல்லின் முளைப்பு திறன் குறித்து அதிகாரிகள் யாரும் பரிசோதனை செய்ததாக தெரியவில்ல. இதனால் விவசாயிகள் திரும்பிக் கொடுக்க வந்து கொடுக்கும் நெல் மூட்டைகள் உட்பட சுமார் 10 டன் கோ 51 விதை நெல் குடோனில் அப்படியே இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை அதிகாரிகள் என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை. பின்னர் குடோனில் வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் அனைத்தும் கனமழை காரணமாக கசிவு ஏற்பட்டு விட்டதாக காரணம் கூறி தவறை மறைத்து விடுவார்கள் என்பதற்காக ஒரு சில விவசாயிகள் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் முளைப்புத்திறன் கொண்ட தரமான நெல்லை வரவழைத்து விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் முளைப்புத்திறன் இல்லாத 10 டன் நெல் மூட்டைகளை என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கும் நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து மீண்டும் இதுபோன்ற தவறு நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாக உள்ளது” என்று தெரிவித்தார்.