Property tax: சொத்து வரி செலுத்தவில்லையா? - கால அவகாசத்தை நீட்டித்தது சென்னை மாநகராட்சி!
சென்னை மாநகராட்சியில் நிகழ் நிதியாண்டுக்கான 2-ம் அரையாண்டு சொத்து வரியை நவம்பர் 15ம் தேதிக்குள் செலுத்துமாறு கால நீட்டிப்பு செய்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சியில் நிகழ் நிதியாண்டுக்கான 2-ம் அரையாண்டு சொத்து வரியை நவம்பர் 15ம் தேதிக்குள் செலுத்துமாறு கால நீட்டிப்பு செய்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம் தனி வட்டியை தவிர்க்குமாறும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
"சென்னை மாநகராட்சி சட்ட விதிகளின்படி, ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்தின் முதல் பதினைந்து தினங்களுக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு வரியில் 5 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2022-23ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், சொத்து வரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் அரையாண்டுக்கான சொத்துவரி பொது சீராய்வின்படி, சொத்து உரிமையாளர்களால் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் வரி செலுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, அக்டோபர் 18ம் தேதி வரை 5.17 லட்சம் பேர் நிலுவை இல்லாமல் சொத்து வரியைச் செலுத்தியுள்ளனர். இரண்டாம் அரையாண்டு தொடக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள்ளாக சொத்து வரி செலுத்தியவர்களுக்கு ரூ.4.67 கோடி ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. சட்ட விதிப்படி, தாமதமாக சொத்து வரி செலுத்துவோர் கூடுதலாக 2 சதவீதம் தனிவட்டி சேர்த்து செலுத்த வேண்டும்.
எனினும், சொத்து வரி பொது சீராய்வின்படி, உயர்த்தப்பட்ட சொத்து வரி மதிப்பீட்டுக்குரிய உயர்த்தப்பட்ட வரியை தனிவட்டி இல்லாமல் செலுத்த நவம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை, வருவாய் அலுவலர், சென்னை மாநகராட்சி என்ற பெயரில் காசோலைகள், வரைவோலைகள், கடன் அல்லது பற்று அட்டை மூலமாக, மாநகராட்சியின் வரி வசூலிப்பவர்களிடம் செலுத்தி, வரிச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், மாநகராட்சியின் வலைத்தளம் மூலமாகவும், எவ்வித பரிமாற்ற கட்டணமில்லாமலும் வங்கிகளின் மூலமும், நம்ம சென்னை, பேடிஎம் போன்ற ஸ்மார்ட்பாேன் செயலிகள் மூலமாகவும், மண்டல அல்லது வார்டு அலுவலகங்களில் அமைந்துள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் சொத்து வரியைச் செலுத்தலாம்.
எனவே, சொத்து வரி பொது சீராய்வின்படி, உயர்த்தப்பட்ட சொத்து வரியை இதுவரை செலுத்தாதவர்கள் நீட்டிக்கப்பட்ட கால அவகாச வாய்ப்பைப் பயன்படுத்தி வரும் 15ம் தேதிக்குள் வரியைச் செலுத்தி, 2 சதவீதம் தனி வட்டியைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்" என்று அந்தச் செய்திக்குறிப்பில் மாநகராட்சி ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.