எஸ்பி வேலுமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது; குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுங்க; நீதிமன்றம் கறார்!
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட டெண்டர் முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு
எஸ்.பி. வேலுமணி மீதான எண்டர் முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் கோவை மற்றும் சென்னை மாநகராட்சியில் பல்வேறு பணிகளை மேற்கோள்ள டெண்டர் விடப்பட்டது. சென்னையில் சாலைகளை சீரமைக்க ரூ.300 கோடி மதிப்பிலும், மழைநீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு ரூ.290 கோடி மதிப்பீட்டிலும் 37 டெண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் அப்போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி, அப்போதைய மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரார்கள் முறைகேடு செய்ததாக கூறி, அறப்போர் இயக்கம் சார்பிலும், திமுக சார்பிலும் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
புகார் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி கடந்த மாதம் எஸ்பி வேலுமணி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணையில் எஸ்பி வேலுமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. எஸ்.பி. வேலுமணி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டதால் தங்கள் தொடர்புடைய வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி ஒப்பந்தத்தில் ஈடுபட்ட எம்.எஸ். கன்ஷ்ட்ரக்ஷன் இன்ஃப்ரா லிமிடெட், ஆலம் கோல்டு, ஆலயம் ஃபவுண்டேஷன், வைதூரியா ஹோட்டல் மற்றும் கண்ஷ்ட்ரோ மால் நிறுவனங்கள் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன.
அதில் ”முன்னாள் அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது ஊழியரான அவருக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லாததால் தங்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டது. அதேநேரம், புகாரில் தொடர்புடைய ஐந்து நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்து அறப்போர் இயக்கம் சார்பிலும் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே வழக்கில் இறுதி விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தயாராக இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மனுக்களை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஐந்து நிறுவனங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறியதுடன், அவற்றின் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தார். மேலும் டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பாக ஆறு வாரங்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவும் காவல் துறைக்கு உத்தரவிட்டார்.