அதிமுக உட்கட்சி மோதல்.. பாஜக பஞ்சாயத்து பேசலாமா? ஆதங்கத்தில் அடிமட்ட தொண்டர்கள்
அதிமுக-வின் உட்கட்சி மோதலில் பாஜக பஞ்சாயத்து பேசுவது அதிமுக-வின் நீண்ட கால தொண்டர்களுக்கு வேதனையையும், ஆதங்கத்தையும் உண்டாக்கியுள்ளது.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சி அதிமுக. திமுக-விற்கு சவால் அளித்து கடந்த அரை நூற்றாண்டுகளாக கோலோச்சி வரும் கட்சியாக அதிமுக உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களின் கட்டுப்பாட்டில் வளர்ந்து தற்போது கோடிக்கணக்கான தொண்டர்களை கொண்ட கட்சியாக இருந்து வருகிறது.
மீண்டும் சிக்கலில் அதிமுக:
ஆனால், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சியில் ஏற்பட்ட மோதலின் தாக்கம் தற்போது வரை எதிரொலித்து வருகிறது. பல கட்ட மோதலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி வசம் முழுமையாக அதிமுக சென்ற நிலையில், கடந்த சில வருடங்களாக அதிமுக-வில் புயல் அடிக்காமல் இருந்து வந்தது. ஆனால், தற்போது அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையனே களமிறங்கியுள்ளார்.

அதிமுக-வை ஒருங்கிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கோரிக்கையை வலுப்படுத்த, ஒரு காலத்திலும் சசிகலா, தினகரன். ஓ.பன்னீர்செல்வத்திற்கு கட்சியில் இடம் கிடையாது என்று இபிஎஸ் அடம்பிடித்து வருகிறார். இந்த முட்டல் - மோதலின் உச்சமே செங்கோட்டையன் பகிரங்கமாக பேட்டி அளித்ததும், எடப்பாடி பழனிசாமி அவரது பதவியை பறித்ததும் ஆகும்.
பஞ்சாயத்து பேசும் அதிமுக:
எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்த கையுடன் தற்போது செங்காேட்டையன் டெல்லி சென்றுள்ளார். மன அமைதிக்காக டெல்லி பயணம் என்று செங்காேட்டையன் கூறினாலும், அவர் அமித்ஷாவை நேரில் சென்று சந்தித்து இதுதொடர்பாக பேசியுள்ளார்.
டெல்லி தலையிடலாமா?
அதிமுக தொடங்கப்பட்டது முதல் ஜெயலலிதா இருந்த வரை அதன் முடிவுகள் கட்சியின் தலைவராக இருந்த எம்ஜிஆர், அவரது மறைவிற்கு பிறகு ஜெயலலிதா ஆகியோரால் மட்டுமே எடுக்கப்பட்டு வந்தது. ஆனால், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக-வின் விவகாரங்களில் டெல்லியின் தலையீடு மிக அதிகளவு உள்ளது. இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் வேதனையை உண்டாக்கியுள்ளது.

அதிமுக-வின் தலைவர்கள் இடையேயான மோதல், உட்கட்சி விவகாரங்களை பாஜக-வை வைத்து பஞ்சாயத்து பேசுவது கட்சியின் கீழ்மட்ட தொண்டர்களிடையே அதிருப்தியை உண்டாக்கி வருகிறது. சசிகலா அணி, தினகரன் அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணி என்று அதிமுக சிதறிக் கிடக்கும் சூழலில், பஞ்சாயத்து செய்வதற்காக பாஜக-வை அழைத்து வருவது கட்சியை மேலும் பலவீனப்படுத்தும் என்று அரசியல் நிபுணர்களும், கட்சியின் அடிமட்ட தொண்டர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆதங்கத்தில் அடிமட்ட தொண்டர்கள்:
இதனால், கட்சியின் தலைவர்களே இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றாக அமர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், அதிமுக-வின் உட்கட்சி விவகாரத்தில் மற்றொரு கட்சியின் தலையீட்டை கொண்டு வரக்கூடாது என்றும் அது அதிமுக-வை பலவீனப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பது அதிமுக-வின் கீழ்மட்ட தொண்டர்கள் பலருக்கும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. பாஜக-வை கூட்டணியில் இருந்து நீக்க வேண்டும் என்று தொடர்ந்து அக்கட்சியின் கீழ்மட்ட தொண்டர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், பாஜக-விற்கு பதிலாக விஜய்யுடன் கூட்டணி வைத்தால் ஆளுங்கட்சிக்கு மிகப்பெரிய சவால் அளிக்கலாம் என்பதே அவர்களின் கருத்து ஆகும்.
இந்த விவகாரத்தின் மத்தியில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கட்சியை ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தி போஸ்டர்களும், பேனர்களும் அடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





















