Edappadi Palanisamy: ”விவசாயிகளுக்கு பயன் அளிக்கவில்லை" : வேளாண் பட்ஜெட் குறித்து தாக்கிப்பேசிய எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை, வேளாண் அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். வேளாண் பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
விவசாயிகளுக்கு பயன் அளிக்காத வேளாண் பட்ஜெட்:
தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. விவசாயிகளுக்கு புதிய திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேளாண் பட்ஜெட்டில் அம்சங்கள் இல்லை.
பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து வேளாண் பட்ஜெட் என்று தாக்கல் செய்துள்ளனர். நெல், கரும்பு குறித்து திமுக வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளை பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும். கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு மெட்ரிக் டன் கரும்புக்கு ரூ.4,000 வழங்கப்படும் எனற அறிவிப்பை செயல்படுத்தவில்லை" என்றார் எடப்பாடி பழனிசாமி.
வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள் என்னென்ன?
- 2023-2024-ஆம் ஆண்டு முதல், தமிழ்நாடு அரசால் உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் சிறந்த விவசாயிகளுக்குச் சிறந்த உயிர்ம விவசாயிக்கான 'நம்மாழ்வார் விருது" வழங்கப்பட்டு வருகிறது. 2024-2025-ஆம் ஆண்டிலும் உயிர்ம விவசாயிகளைக் கௌரவிக்கும் வகையில், பாராட்டுப் பத்திரத்துடன் பணப்பரிசும் முதல் மூன்று விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதற்கென 5 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
- ரூ.32.90 கோடி மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்
- 10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கிட ரூ.90 இலட்சம் ஒதுக்கீடு
- விவசாயிகள் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு
- டெல்டா மாவட்டங்களில் 2,235 கிலோ மீட்டர் நீளத்திற்கு "சி" "டி" பிரிவு வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
- ஈரோடு கள்ளக்குறிச்சி தர்மபுரி மாவட்டங்களுக்கு 8 மஞ்சள் வேக வைக்கும் இயந்திரங்களும் 5 மஞ்சள் மெருகூட்டும் இயந்திரங்களும் ரூ. 2.12 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்
- கொல்லிமலை மிளகு, புவனகிரி மிதிபாகற்காய், ஐயம்பாளையம் நெட்டை தென்னை, கண்வலிக்கிழக்கு விதைகள், சத்தியமங்கலம் செவ்வாழை, செஞ்சோளம், செங்காந்தாள் விதை, திருநெல்வேலி அவுரி ஆகிய விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும்
- 2024-2025-ஆம் ஆண்டில் வேளாண்மை மற்றும் அதன் தொடர்புடைய துறைகளான கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, பால்வளத்துறை, நீர்வள ஆதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, உணவுத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, பட்டு வளர்ச்சித்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகளின் கீழ் 42 ஆயிரத்து 281 கோடியே 87 இலட்சத்து 84 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
- 20242025ஆம் ஆண்டில், காவிரி டெல்டா பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் முன், 5,338 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்களைத் தூர்வாருவதற்கு, 110 கோடி ரூபாய் செலவில், 919 பணிகள் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.