டில்லிக்கும் துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி - டிடிவி தினகரன்
மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பார்வையிட்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 11 -ஆம் தேதி பெய்த வரலாறு காணாத கனமழையின் காரணமாக சீர்காழி, தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மாமாகுடி ஊராட்சி அப்புராஜபுரம்புத்தூர் கிராமத்தில் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் பார்வையிட்டார். அப்போது அவரிடம் நீரில் மூழ்கி சேதம் அடைந்த பயிர்களை விவசாயிகள் காண்பித்து வேதனையை வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து அப்புராஜபுரம்புத்தூர் கிராமவாசிகள் மற்றும் விவசாயிகள் 200 பேருக்கு 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி மற்றும் போர்வை ஆகியவற்றை நிவாரண உதவியாக டிடிவி தினகரன் வழங்கி ஆறுதல் தெரிவித்தார். பின்னர் சீர்காழி தாலுக்கா வேட்டங்குடி, நல்லூர் பகுதிகளில் வெள்ளபாதிப்புகளை பார்வையிட்டு அப்பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், இந்த கடும் மழை வெள்ளத்தால் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பாதிப்பை அடைந்துள்ளது. இந்த பகுதியை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவித்து மத்திய, மாநில அரசு நிவாரணம் வழங்க வேண்டும். ஸ்டாலின் அவர்கள் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது இதுபோன்ற வெள்ளபாதிப்புகளை பார்வையிட்டு அரசு என்ன செய்யவேண்டும் என்று சொன்னாரோ அதை இப்போது செய்யவேண்டும். ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கும்போது சொல்வதும், ஆளுங்கட்சியாக இருக்கும்போது செய்வதும் வேறு ஒன்றாக உள்ளது. குறைந்த பட்சம் நிவாரணமாக ஒரு குடும்ப அட்டைகளுக்கு 3000 ரூபாய் வழங்கவேண்டும், விவசாய பாதிப்புகளுக்கு ஏக்கருக்கு 30,000 ஆயிரம் வழங்கவேண்டும், மீண்டும் மழை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் உடமைகளை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
பேரிடர் கால நிவாரணம் வழங்குவதில் மாற்றான் தாய் மனப்பக்குவத்தில் மத்திய அரசு செயல்பட கூடாது. பழனிச்சாமிக்கும், ஸ்டாலினும் வித்தியாசம் இல்லாத அளவிற்குதான் திமுக நடவடிக்கைகள் இருக்கிறது. விவசாயிகளுக்கான பயிர்காப்பீட்டு திட்டத்தை அரசே செலுத்த வேண்டும், மக்களுக்கான கோரிக்கை நிறைவேற்றி தராவிட்டால் போதிய கால அவகாசம் வழங்கி பின்னர் போராட்டத்தை கையில் எடுப்போம். எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி பொறுப்பில் கொண்டுவந்த எங்களுக்கும், ஆட்சி போய்விடும் என்ற சூழலில் உதவி செய்த பன்னீர்செல்வத்தும் துரோகம் செய்தவர், அதிமுகவில் நிரந்தர பொதுச்செயலாளர் பதவி ஜெயலலிதா ஒருவருக்கு மட்டும்தான் என பொதுக்குழு உருவாக்கிவிட்டு தற்போது பொதுச்செயலாளர் பதவிக்கு வருவதற்காக ஜெயலலிதாவிற்கே துரோகம் செய்து விட்டார். நான்கு ஆண்டுகள் காலம் ஆட்சி நடந்தது உதவிய டெல்லிக்கும் தற்போது பழனிச்சாமி துரோகம் செய்ய தொடங்கிவிட்டார்.
இதனை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என நாங்கள் நினைக்கிறோம். துரோகத்தின் மொத்த உருவமான பழனிசாமி வீழ்ந்தால் தான் அது அதிமுக விற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது. இத்தனை ஆண்டுகளாக ஊழல் முறைகோடுகளால் வந்த பணத்தை வைத்துக்கொண்டு யாரை வேண்டுமானாலும் வசப்படுத்தி விடலாம் என ஒரு கட்சி நினைத்தால் அது ஜனநாயகத்திற்கே ஆபத்தாக முடிந்துவிடும். அம்மாவின் சின்னம் இருப்பதால்தான் பலர் பழனிசாமியுடன் உள்ளனர். தற்போது அதிமுக செயல்படாத கட்சியாக உள்ளது அந்த நிலையை உருவாக்கியவர் மெகா பழனிசாமி என தெரிவித்தார்.
முன்னதாக அப்புராஜபுரம்புத்தூரில் டிடிவி தினகரன் நிவாரண உதவிகளை வழங்கி தொடங்கி வைத்து சென்ற பின்னர், நிவாரண பொருட்களை பெற கிராம மக்கள் முண்டியடித்துக் கொண்டு முன்னேறியதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் நிவாரண பொருட்களை அக்கட்சி நிர்வாகிகள் பொது மக்களிடம் தூக்கி வீசினர். இதனை பிடிப்பதற்காக பொதுமக்கள் முண்டியடித்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு சிலர் மயக்கம் அடைந்தனர்.