வறட்சி பாதிப்பு; குறுவை விவசாயிகளுக்கு வாழ்வாதார நிவாரணம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
மேட்டூர் அணை திறந்துவிடாததால் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் வாழ்வாதார நிவாரணம் வழங்கி வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறந்துவிடப்படாத நிலையில், நீரின்றி, குறுவை சாகுபடி செய்ய இயலாத பகுதிகளில் உள்ள பாசனப் பகுதிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000/- உடனடியாக வறட்சி நிவாரணமாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை எடப்பாடி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
டெல்டா பகுதிகளுக்கு குறுவை சாகுபடி செய்ய ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறந்துவிடப்படும். இந்தாண்டு திறந்துவிடப்படவில்லை. குறுவைத் தொகுப்பு, மக்களை ஏமாற்றும் அரசியல் நாடகங்களில் ஒன்று ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாததால் வறட்சி ஏற்பட்டு விவசாயில் பாதிக்கப்பட்டுள்ளதற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:
”டெல்டா குறுவை சாகுபடிக்கு கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து போதிய தண்ணீர் திறந்துவிடாததால் பயிரிடப்பட்ட குறுவைப் பயிர்கள் கருகின. குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு செய்யாததால், கருகிய மற்றும் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு பயிர்க் காப்பீடு பெற முடியவில்லை. உயர்த்தப்பட்ட (NDRF) பேரிடர் நிவாரணமாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 17,000/- என்று மத்திய அரசு உயர்த்தி அறிவித்ததைக்கூட வழங்காமல், திமுக அரசு ரூ. 13,500/- மட்டும் வழங்கி டெல்டா விவசாயிகளை வஞ்சித்தது. இந்த ஆண்டு ஜூன் 12-ல் டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடாத நிலையில், டெல்டா விவசாயிகளினுடைய தேவை என்ன என்பதைக் கண்டுகொள்ளாமல் அவசர கோலத்தில் அறிவித்த குறுவை சிறப்பு தொகுப்பு அறிவிக்கப்பட்டது.” என்பதை குறிப்பிட்டு பயிர்காப்பீடு குறித்து வலியுறுத்தியிருந்தார்.
” அன்று (அதிமுக ஆட்சிக்காலத்தில்) எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர், அம்மா ஆட்சிக் காலத்தில், பாதிக்கப்பட்ட பாசன பரப்பிற்கு ஏக்கர் ஒன்றுக்கு 30,000/- ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூக்குரலிட்டதை டெல்டா விவசாயிகள் மறக்கவில்லை.
இந்த ஆண்டு நீரின்றி, குறுவை சாகுபடி செய்ய இயலாத பகுதிகளில் உள்ள பாசனப் பரப்பு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000/-த்தை உடனடியாக வறட்சி நிவாரணமாக வழங்க வேண்டும். குறுவை சாகுபடி செய்து, நீரின்றி பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பயிர்க் காப்பீடு நிவாரணம் பெற்றுத் தரவேண்டும். குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படாததால், வேளாண் தொழில் இல்லாமல். பாதிக்கப்பட்டுள்ள வேளாண் தொழிலாளர்களுக்கு குறுவை பயிர் காலத்திற்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு மாதத்திற்கு ரூ.5,000/- நிவாரணம் வழங்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
” இந்த வறட்சியால் கால்நடைகளுக்கு வைக்கோல் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வினால் விவசாயிகளின் உப தொழிலான கால்நடை வளர்ப்பை தொடர்ந்து செய்ய இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எங்களது ஆட்சிக் காலத்தில் வறட்சி ஏற்பட்டபோது விலையில்லா வைக்கோல் தீவனம் வழங்கினோம். எனவே, விவசாயிகளின் உப தொழிலான கால்நடை வளர்ப்புக்கு தேவைப்படும் தீவனங்களை விலையில்லாமல் வழங்கிட வேண்டும்.” என்று அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.