Cuddalore: குடலுடன் சேர்த்து தைக்கப்பட்ட கர்பப்பை.. பிரசவத்தின் போது மருத்துவர்கள் அலட்சியம்.. கடலூர் அரசு மருத்துவமனையில் கொடூரம்
கடலூரில் பிரசவத்திற்கான அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் பெண்ணின் கர்பப்பையை குடலுடன் சேர்த்து தைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூரில் பிரசவத்திற்கான அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் பெண்ணின் கர்பப்பையை குடலுடன் சேர்த்து தைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2022-ல் பிரசவம்:
கடலூர் மாவட்டம் சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மனைவி பத்மாவதி. கருவுற்று இருந்த இவர் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், பிரசவ வலி ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்ற நிலையில் வயிறு வலி காரணமாக அடிக்கடி மருத்துவமனை சென்று வந்துள்ளார். அறுவை சிகிச்சை செய்யப்பட்டதன் காரணமாக வலி ஏற்படலாம் என கருதினாலும், தொடர்ந்து அவ்வப்போது வலி ஏற்பட்டதால் பதமாவதியின் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதிர்ச்சி தந்த பரிசோதனை:
இதையடுத்து, கடலூர் ஜிப்மர் மருத்துவனைக்கு பத்மாவதியை அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளனர். அதில் கிடைத்த முடிவுகள் அவரது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. அதன்படி, பத்மாவதிக்கு பிரசவ அறுவை சிகிச்சையின் போது கர்பப்பை உடன் குடலையும் சேர்த்து தைத்தது தெரியவந்தது. இதனை அடுத்து கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் வெங்கடேசன் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மருத்துவ அறிக்கை வேண்டும் என அரசு மருத்துவர்களிடம் ஆட்சியர் கேட்டுள்ளார்.
இதுவரை கிடைத்திடாத மருத்துவ அறிக்கை:
தவறான மருத்துவ சிகிச்சை தொடர்பாக அறிக்கை சமர்பிக்க கோரி ஆட்சியர் உத்தரவிட்டு நீண்ட நாட்கள் ஆகியும், கடலூர் அரசு மருத்துவமனை சார்பில் இதுவரை அறிக்கை சமர்பிக்கப்படவில்லை. அதுதொடர்பாக ஆட்சியர் எந்த மேல்நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதை கண்டித்து வெங்கடேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் கடலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தீக்குளிக்க முயற்சி:
அப்போது, நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறோம், எங்கள் உடல் உறுப்புகளை தானமாக எடுத்துக்கொள்ளுங்கள் என கூறிய வெங்கடேசன், தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கூட்டாக தீக்குளிக்க முயன்றார். இதைகண்ட அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், வெங்கடேசன் உள்ளிட்டோரை தடுத்தி நிறுத்தினர். மேலும் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கபப்டும் என உறுதியும் அளித்தனர். அதையேற்று, வெங்கடேசன் தனது குடும்பத்தினருடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
மருத்துவ தவறுகள்:
இந்தியாவில் ஆண்டிற்கு சராசரியாக 52 லட்சம் மருத்துவ தவறுகள் நடைபெறுவதாக சில ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதில் பெரும்பாலானவை நோயை கண்டறிதல், தவறான மருந்துகளை பரிந்துரைப்பது, அறுவை சிகிச்சையில் பிழைகள்,நோய்தொற்றுகள் ஆகியவை ஆகும். இந்த மருத்துவ தவறுகள் அநாவசியமாக பல உயிர்கள் பறிபோக காரணமாகின்றன. இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுவது அவசியமாகும்.