TN School Leave: கனமழை எதிரொலி; தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மிக கனமழை எச்சரிக்கை காரணமாக, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மிக கனமழை எச்சரிக்கையின் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தமிழ்நாட்டில் அதிக மழையை தரக்கூடிய வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மேலும், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது என்ன.?
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், வரும் 19-ம் தேதி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள-கர்நாடக பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்பத்தூர், நீலகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் சென்னை, திருவள்ளூர், கடலூர். மயிலாடுதுறை தாசுப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.





















