Annamalai: "ஒரு மனிதன் செய்த தவறு; துறையையே தவறாக சொல்லக் கூடாது" - அமலாக்கத்துறை குறித்து அண்ணாமலை
ஒரு மனிதன் தவறு செய்வதை வைத்து ஒரு துறையையே தவறாக சொல்லக்கூடாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் பேரில், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைதாகியுள்ள நிலையில், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமலாக்கத்துறை அதிகாரி கைதுசெய்யப்பட்டது தொடர்பாக பேசிய அவர், ”ஒரு மனிதன் தவறுசெய்ததற்கு ஒட்டுமொத்த அமலாக்கத்துறையே தவறு என்று சொல்லிவிட முடியாது. அதேபோல, தமிழக காவல்துறையில் யாரோ ஒருவர் தவறு செய்ததற்காக மொத்த காவல்துறையையும் மோசம் என்று சொல்ல முடியாது. தவறு செய்துள்ள அமலாக்கத்துறை அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. இதனை அரசியலாக பார்க்கக்கூடாது. ஆனால் இது அரசியல்வாதிகளுக்கு புரியாது. தமிழக அரசியலில் மெச்சூரிட்டி குறைவான அரசியல்வாதிகளே உள்ளனர்." என்று அண்ணாமலை கூறினார்.
முன்னதாக, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர் சுரேஷ் பாபு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும் அது குறித்த விசாரணை அமலாக்கத்துறையிடம் வந்துள்ளது பற்றியும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தெரிந்துகொண்டுள்ளார். இந்த வழக்கிலிருந்து விடுவிக்க சுரேஷ் பாபுவிடம், அங்கித் திவாரி ரூ.3 கோடி லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், மருத்துவர் சுரேஷ் பாபு தரமறுத்ததால், கண்டிப்பாக ரூ. 51 லட்சமாவது அன்பளிப்பாகத் தரவேண்டும் அங்கித் திவாரி மிரட்டி உள்ளார்.
இதனை அடுத்து சுரேஷ் பாபு, அங்கித் திவாரிக்கு, ரூ.20 லட்சம் பணம் கொடுத்துள்ளார். இதனை அடுத்து அவர் மீதி ரூ.31 இலட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மருத்துவர் சுரேஷ் பாபு, லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுக்களை மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் கொடுத்து அனுப்பினர்.