Annamalai: மத்திய அரசு திட்டங்களில் தி.மு.க. அரசு ஊழல் செய்கிறது - அண்ணாமலை குற்றச்சாட்டு
ஜல் ஜீவன் திட்டம் முதல் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என அனைத்து மத்திய அரசின் திட்டங்களிலும் ஊழல் செய்து பணம் சம்பாதிப்பதை மட்டுமே திமுக அரசு குறிக்கோளாக கொண்டுள்ளதாக என அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
ஜல் ஜீவன் திட்டம் முதல் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என அனைத்து மத்திய அரசின் திட்டங்களிலும் ஊழல் செய்து பணம் சம்பாதிப்பதை மட்டுமே தி.மு.க. அரசு குறிக்கோளாக கொண்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
நெல்லையில் கடந்த சில நாட்களாக தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று பிற்பகல் 2 மணி அளவில் திடீரென்று மழை பெய்தது. சுமார் 45 நிமிடம் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன. மேலும் சூறைக்காற்றில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் கேலரியின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரை பெயர்ந்து தூக்கி வீசப்பட்டு சரிந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கேலரி மேற்கூரை சரிந்து விழுந்தபோது அங்கு யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
ஸ்மார்ட் சிட்டி திட்டம்:
இந்நிலையில் இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
"நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி மைதானத்தில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 14 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மேற்கூரை, அரை மணி நேரம் மழைக்குத் தாங்காமல் இடிந்து விழுந்துள்ளது. இதற்கு முந்தைய ஆட்சிக் காலத்தில் இந்த பணிகளுக்கான டெண்டர் கோரப்பட்டிருந்தாலும், பெருவாரியான பணிகள் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகே துவங்கியுள்ளது.
இந்த மைதானத்தை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து விடுவதற்கு முன்னர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் முதன்மை செயலாளரான அபூர்வா 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வ.உ.சி விளையாட்டு அரங்கத்தின் புதுப்பித்தல் பணியைப் பார்வையிட்ட பின், பணிகள் திருப்திகரமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஊழலே குறிக்கோள்:
8 மாத பயன்பாட்டிற்கு பிறகு இடிந்து விழுந்துள்ளது மேற்கூரை. யாரும் இல்லாத நேரத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஜல் ஜீவன் திட்டம் முதல் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என, அனைத்து மத்திய அரசின் திட்டங்களிலும் ஊழல் செய்து பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளது திறனற்ற திமுக அரசு.
பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இந்த மைதானத்தின் புதுப்பித்தல் பணியைச் செய்தவர் மீதும் இதற்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்." இவ்வாறு அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
அBIS Hallmark Gold: மக்களே.. ஹால்மார்க் இல்லாத தங்க நகைகளை இனி விற்க முடியாது..! அப்போ என்ன பண்றது..?