BIS Hallmark Gold: மக்களே.. ஹால்மார்க் இல்லாத தங்க நகைகளை இனி விற்க முடியாது..! அப்போ என்ன பண்றது..?
பழைய ஹால்மார்க் இல்லாத தங்க ஆபரணங்களை மாற்றவோ அல்லது விற்கவோ வைத்திருந்தால், அவற்றை HUID மூலம் ஹால்மார்க் செய்ய வேண்டும். அதன் பின்னர்தான் விற்க முடியும்.
நகைகள் போன்ற தங்கப் பொருட்களை விற்பனை செய்வது தொடர்பான புதிய விதிமுறைகளை அரசு சமீபத்தில் உருவாக்கியுள்ளது. தங்கப் பொருட்களின் விற்பனையில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதற்காகவும், வாடிக்கையாளர்கள் ஏமாறாமல் இருப்பதற்காகவும் இந்த புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ள. இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல், அனைத்து தங்க நகைகளும் ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் (HUID) பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் அந்த விதி. உங்களிடம் ஹால்மார்க் இல்லாத பழைய தங்க நகைகள் இருந்தால், அதை மாற்றவோ அல்லது விற்கவோ விரும்பினால், முதலில் அதை ஹால்மார்க்காக மாற்றம் செய்ய வேண்டும்.
HUID என்றால் என்ன?
HUID தங்க ஆபரணங்கள் மற்றும் பொருட்களில் உள்ள ஹால்மார்க் தனித்துவ அடையாள எண், தயாரிப்புக்கான தனித்துவமான பண்புகளை வழங்குகிறது. குறிப்பிட்ட தங்கப் பொருளில் கூறப்பட்டுள்ள கேரட் விகிதங்கள் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்வதுதான் HUID. தங்கப் பொருட்களில் இதற்கான முத்திரை இருக்க வேண்டும், எடுத்துக்காட்டாக, 22 காரட் மற்றும் இந்திய தரநிலைகள் பணியகம் (BIS) லோகோ பொறித்திருக்கும்.
ஹால்மார்க் இல்லாத பழைய நகைகளை விற்பது எப்படி?
புதிய அரசு விதிகளின்படி, ஹால்மார்க் இல்லாத தங்க நகைகளை விற்க முடியாது. பழைய ஹால்மார்க் இல்லாத தங்க ஆபரணங்களை மாற்றவோ அல்லது விற்கவோ வைத்திருந்தால், அவற்றை HUID மூலம் ஹால்மார்க் செய்ய வேண்டும். அதன் பின்னர்தான் விற்க முடியும். உங்கள் நகைகள் ஏற்கனவே பழைய ஹால்மார்க் அடையாளங்களுடன் பொறிக்கப்பட்டிருந்தால், மீண்டும் ஹால்மார்க்கிங் செயல்முறைக்கு செல்ல வேண்டியதில்லை, அதற்கு HUID இருக்க வேண்டிய அவசியமல்லை.
எவற்றுக்கெல்லாம் விலக்கு?
இது தவிர, இரண்டு கிராமுக்கு கீழ் உள்ள தங்கம், சர்வதேச கண்காட்சிகளுக்கான நகைகள், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் ஃபவுண்டைன் பேனாக்கள், கைக்கடிகாரங்கள் அல்லது சிறப்பு வகை ஆபரணங்கள் ஆகியவை ஹால்மார்க்கிங்கிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. ஆண்டுக்கு 40 லட்சத்துக்கும் குறைவான விற்பனை கொண்ட நகைக்கடைக்காரர்களுக்கும் இந்த நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பழைய தங்க நகைகளை ஹால்மார்க் செய்வது எப்படி?
வாடிக்கையாளர்கள் BIS-அங்கீகரிக்கப்பட்ட ஹால்மார்க்கிங் மையத்திலிருந்து நகைகளை சோதனை செய்து கொள்ளலாம். பரிசோதிக்கப்பட வேண்டிய பொருட்களின் எண்ணிக்கை ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால், ஒவ்வொரு பொருளுக்கும் ரூ.45 செலுத்த வேண்டும். நான்கு அல்லது குறைவான பொருட்கள் இருந்தால், ஒவ்வொன்றிற்கும் கட்டணம் 200 ரூபாய். BIS இல் பதிவுசெய்யப்பட்ட நகைக்கடைக்காரர் மூலமாகவும் ஆபரணங்களை ஹால்மார்க் செய்துகொள்ளலாம். நகைக்கடைக்காரர் பொருளை BIS மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் மையத்திற்கு செயல்முறைக்காக எடுத்துச் செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.