"போக்குவரத்து ஊழியர்கள் விவகாரத்தில் திமுக அரசு எதுவும் செய்யவில்லை" : சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
டிசம்பர் 10-ஆம் தேதி 12 மணிக்கு 10 நிமிடம் வாகனங்களை நிறுத்தி எதிர்ப்பை தெரிவிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் மாநில சம்மேளன கூட்டம் செங்கல்பட்டில் சம்மேளனத்தின் தலைவரும் சிஐடியு மாநிலத் தலைவருமான அ.சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளா் கே.அறுமுக நயினார், உதவித் தலைவர்கள் எம்.சந்திரன், அன்பழகன், பொருளாளர் சசிக்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அ.சவுந்தரராஜன் பேசியதாவது,
போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகின்றது. புதிய ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையை நடத்தாமல் அதிமுக அரசு சென்றுவிட்டது. தற்போது வந்துள்ள அரசு ஒப்பந்தம் போடப்படும் என அறிவித்தார்கள் தேர்தல் வாக்குறுதியிலும் இது உள்ளது. ஆட்சிக்கு வந்து ஆறுமாதங்கள் ஆன பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை. அமைச்சர் கலந்து கொள்ளும் பேச்சுவார்த்தையில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்துப் பேசப்படுவதில்லை. அரசு உடனடியாக ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராடிய கோரிக்கைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்காதது தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்கள் கோபத்திலும் வேதனையிலும் உள்ளனர்.
அரசுப் போக்குவரத்து கழகத்தைச் சிறப்பாக நடத்துவோம் என அரசு கூறுவது வரவேற்கத்தக்கது. ஆனால் அதற்கான உருப்படியான நடவடிக்கை ஏதும் அரசிடம் இல்லை. அவர்களே ஒரு குழு போட்டார்கள் அந்த குழு விரிவான அறிக்கையைக் கொடுத்துள்ளது. ஆலோசனைகள் கொடுத்துள்ளது. அதையும் செய்யச் சரியான நடவடிக்கை அரசிடம் இல்லை. பேருந்துகளின் எண்ணிக்கை தற்போது 3 ஆயிரம் குறைந்துள்ளது. பேருந்துகளின் எண்ணைக்கையை அதிகப்படுத்த வேண்டியுள்ளது. பேருந்துகளைப் பராமரிப்பதற்கான போதிய ஊழியர்கள் இல்லை.
உதிரிப் பாகங்கள் இல்லை, கடந்த காலங்களில் ஒரு பேருந்து அறு வருடம் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டர் ஓட்ட வேண்டும் என இருந்தது. அரசு தற்போது ஆறு வருடத்தை 9 வருடமாகவும், 7 லட்சத்தை 12 லட்சம் கிலோமீட்டராகவும் உயர்த்தி அரசு ஆணை வெளியிட்டுள்ளது. தொழிலாளர்கள் இந்த பழைய பேருந்துகளை கஷ்டப்பட்டு ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். இதனால் உதிரிப்பாகம், பராமரிப்பின் தேவை அதிகரிக்கின்றது. ,தை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் அரசிடம் இல்லை. இதனால் பொது போக்குவரத்தில் பல பிரச்சனைகள் உள்ளது.
பேட்டா பிரச்சினையில் மட்டும் 27 கோடி ரூபாய் தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. தொழிலாளர்களிடமிருந்து எல்ஐசி, வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பிடித்தம் செய்யப்பட்ட 10 அயிரம் கோடி ரூபாய் அரசிடம் உள்ளது. இந்த பணத்தை தொழிலார்களுக்கு வழங்காமல் எடுத்து பேருந்து ஓட்ட பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். சமூக காரணங்களுக்காக பயன்படுத்தும் பேருந்துகள் என்பதால் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை அரசு ஆண்டு தோறும் நிதி ஒதுக்கி வழங்கிட வேண்டும் இதுபோன்ற பிரச்சனைகளைச் சரிசெய்ய விட்டால் தொழிலாளர்களுக்கும் அரசுக்குமான பிரச்சனைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். தமிழக முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. தேர்தல் வருவதால் ஒன்றிய அரசு தற்போது ஐந்து ரூபாய் குறைத்துள்ளது. 37 ரூபாயை உயர்த்திவிட்டு ஐந்து ரூபாய் குறைத்துள்ளனர். 55 ரூபாய் டீசலும், 65 ரூபாய் பெட்ரோலும் வழங்க முடியும். வரிகள் உள்ளிட்ட அனைத்தும் இதில் அடங்கும். மக்களிடம் கொள்ளை அடிக்கும் அரசாக ஒன்றிய அரசு உள்ளது. போக்குவரத்து சங்கங்கள், உள்ளிட்ட பல்வேறு வெகுஜன அமைப்புகள் இணைந்து உயர்ந்து கொண்டிருக்கும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து வருகின்ற டிசம்பர் 10தேதி போராட்டம் நடத்தத் தயாராகி வருகின்றோம்.
டிசம்பர் 10 தேதியன்று இயங்கிக் கொண்டிருக்கும் வாகனங்களை 12 மணியிலிருந்து 10 நிமிடம் வாகனங்களை நிறுத்துங்கள் என பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வாகன ஓட்டிகள் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக வாகனங்களை 10 நிமிடம் நிறுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மிக கடுமையான ஒடுக்கு முறைக்கும் மத்தியில் தொடர்ந்து போராடி மிக கொடிய விவசாய சட்டங்களை திரும்ப பெற வைத்த ஒரு வருடப் போராட்டம் தற்போது வெற்றி பெற்றுள்ளது. இதுவே அனைவருக்குமான பாடம், இதே போன்று தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தி மிக மோசமான பாதிப்புகளைத் தொழிலாளர்களுக்கு ஒன்றிய அரசு ஏற்படுத்தியுள்ளனர். இதை எதிர்த்தும் தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றனர். வருகின்ற பிப்ரவரி மாதம் அகில இந்திய வேலை நிறுத்தம் நடத்திட தொழிற்சங்கங்கள் திட்டமிட்டு வருகின்றது. என்றார்.