DMK Subbulakshmi Jagadeesan: திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்தாரா சுப்புலட்சுமி ஜெகதீசன்? அவர் சொன்னது என்ன?
திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை சுப்புலட்சுமி ஜெகதீசன் திடீர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை சுப்புலட்சுமி ஜெகதீசன் திடீர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி சட்டமன்றத்தில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் சரஸ்வதியிடம் தோல்வியை தழுவிய நிலையில், தனது தோல்விக்கு ஈரோடு மாவட்ட திமுக நிர்வாகிகள் செய்த சதி செயலே காரணம் என்று கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைமைக்கு கடிதம் கொடுத்திருந்தார். ஆனால், அந்த கடிதத்தை மு.க.ஸ்டாலின் கண்டுக்கொளாத நிலையில், அதிருப்தியில் இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், தனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையாவது திமுக தலைமை தரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார்.
ஆனால், அதுவும் கிடைக்காத நிலையில், கட்சியிலும் மாவட்டத்திலும் செல்வாக்கு இல்லாமல் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் மட்டும் நீடிப்பது சரியாக இருக்காது என்று தன்னுடைய ஆதரவாளர்களிடையே சுப்புலட்சுமி வருத்தப்பட்டதகாவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அவரது கணவர் ஜெகதீசன் திமுக தலைமையை கடுமையாக விமர்சித்து முகநூலில் சில நாட்களுக்கு கருத்து பதிவிட்டது திமுக தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வரும் அக்டோபர் மாதம் திமுக பொதுக்குழு நடைபெற்ற உள்ள நிலையில், தனது துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை சுப்புலட்சுமி ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து சுப்புலட்சுமியை தொடர்புகொண்டு கேட்டபோது இப்போது எதுவும் சொல்ல முடியாது என்றும், இப்போதைக்கு தன்னிடம் செய்திகள் இல்லை என்றும் சொன்னார். ஆனால், தான் ராஜினாமா செய்யவில்லை என அவர் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.
திமுகவை பொறுத்தவரை தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மை செயலாளர் பொறுப்புகளுக்கு பிறகு துணைப் பொதுச்செயலாளர் பதவிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சுப்புலட்சுமியை தவிர்த்து திமுக துணைப் பொதுச்செயலாளர்களாக தற்போது ஐ.பெரியசாமி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் உள்ளனர். மகளிருக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவேண்டும் என்ற வகையில் சுப்புலட்சுமிக்கு துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை திமுக அளித்த நிலையில், அவர் ராஜினாமா செய்தது உறுதியாகிவிட்டால், அந்த பொறுப்புக்கு நடைபெறவுள்ள திமுக பொதுக்குழுவில் மற்றொரு பெண் தேர்வு செய்யப்படுவார். அப்படி திமுக யாரை துணைப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போதே எகிறியுள்ளது.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு கொடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
கைக்குள் அடங்காத தங்கை! ஊருக்கு மகாராணி! ஆனால் மார்க்கரேட்டுக்கு அக்கா! எலிசபெத்தின் மறுபக்கம்!
TN Rains: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை.. சென்னையில் நிலவரம் தெரியுமா மக்களே..