கரூர்: மெட்ராஸ் பட பாணியில் சுவருக்காக சண்டை! அடித்துக்கொண்ட பாஜக - திமுக!
சுவரில் பாரதிய ஜனதா கட்சி, திராவிட முன்னேற்ற கழக கட்சியின் நிர்வாகிகள் சுவர் விளம்பரம் சம்பந்தமாக பேச்சுவார்த்தை தள்ளுமுள்ளு ஆக மாறிய நிலையில் போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பிரதட்சண சாலை - சர்ச் கார்னர் பகுதியில் அமைந்துள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வளாக வெளியே உள்ள சுவற்றில் திமுக, பாஜக கட்சி விளம்பரம் செய்வதற்காக ஒரே இடத்தில் கூடியதால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. விளம்பரம் வால் போஸ்டர் ஒட்ட தடை செய்யப்பட்ட பகுதியில் சமீப காலமாக கட்சி வால் போஸ்டர்கள் அப்பகுதியில் ஒட்டி வந்துள்ளனர். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் ஏற்பாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் சுவர் விளம்பரத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி, மாநில தலைவர் அண்ணாமலை, மாவட்ட தலைவர் செந்தில்நாதன் உள்ளிட்ட படங்கள் சுவர் விளம்பரம் வரையப்பட்டிருந்தது என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று (14.04.2022) மதியம் அப்பகுதியில் திமுக நிர்வாகிகள் உத்தரவிற்கிணங்க சுவர் விளம்பரம் எழுதும் ஆட்கள் அங்கு பாரதிய ஜனதா கட்சியின் விளம்பரத்தை அழுத்திவிட்டு திமுக விளம்பரத்தை வரையத் தொடங்கி உள்ளனர்.
இதனை அவ்வழியாக வந்த பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் பார்த்துவிட்டு சுவர் விளம்பரம் வரைந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து இந்த தகவல் திமுக நிர்வாகியை பரவ அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் திரண்டனர். இந்நிலையில் அங்கு பாரதிய ஜனதா கட்சியின் 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இருந்த நிலையில் திமுக பாரதிய ஜனதா கட்சி கட்சி நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த தகவலை அடுத்து அங்கு பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் திரண்டனர். இந்த நிலையில் அங்கு இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உடன்பாடு ஏற்படாததால் இரு கட்சிகளுக்கும் இடையே தள்ளு ,முள்ளு ஏற்பட்டது.
பின்னர் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த போது அருகில் பாஜக நிர்வாகி ஒருவரிடம் இருந்து செல்போனை திமுக நிர்வாகிகள் பறித்து கொண்டதாக கூறி பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த திமுக நிர்வாகிகளும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். போலீசார் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது பாஜக மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் சம்பவ இடத்திற்கு வந்து போலீசாரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து இருதரப்பினரும் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் சுவற்றில் திமுக நிர்வாகிகள் அவர் விளம்பரத்தை வரைந்து விட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பாரதிய ஜனதா கட்சி மற்றும் திமுக கட்சியினர் சுவர் விளம்பரம் சம்பந்தமாக தள்ளுமுள்ளு சாலைமறியல் ஆர்ப்பாட்டம் என அடுத்தடுத்து நிகழ்வால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது இதனால் சுமார் 2 மணி நேரம் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.