DMK Condemns BJP: செந்தில்பாலாஜி கைது விவகாரம்; மத்திய அரசை கண்டித்து இன்று தி.மு.க. கண்டன பொதுக்கூட்டம்
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையை தொடர்ந்து, மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று கோவையில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையை தொடர்ந்து, மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
கண்டன பொதுக்கூட்டம்:
மத்திய அரசின் கீழ் அமைந்துள்ள அமலாக்கத்துறையால் கடந்த செவ்வாயன்று இரவோடு இரவாக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, பாஜகவின் ஜனநாயக விரோத - மக்கள் விரோத - பழிவாங்கும் எதேச்சதிகார நடவடிக்கைகளைக் கண்டித்து கோவை மாநகர், சிவானந்தா காலனியில் இன்று மாலை 5.00 மணி அளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் சார்பில் ”மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்” நடைபெறும். பாஜகவுக்கு இறுதித் தோல்வியைத் தரும் வரையில் நமது மக்கள் பரப்புரை தொடரும் என அறிவிக்கப்பட்டது.
ஏற்பாடுகள் தீவிரம்:
இதையடுத்து கோவை மாவட்டம் முழுவதிலும் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவருக்கும் கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தையொட்டி அந்த பகுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்பும் போடப்பட உள்ளது. சிவானந்தா காலனியில் நடைபெற உள்ள இந்த கண்டன பொதுக்கூட்டத்தில், திமுக பொதுச்செயலாளரும், நீர்வள அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்றுக் கண்டன உரையாற்ற உள்ளார்.
தலைவர்கள் பங்கேற்பு:
இந்த கண்டன பொதுக்கூட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்களான காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்தி கம்யூனிஸ்டு செயலாளர் ஆர்.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன உரையாற்ற உள்ளனர்.
கண்டன அறிக்கை:
இதுதொடர்பாக திமுக கூட்டணி கட்சிகள் வெளியிட்ட கூட்டறிக்கையில், ”கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் - மக்கள் விரோத ஆட்சியை கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடத்திக் கொண்டு இருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் மக்களுக்குக் கொடுத்தது அனைத்தும் கண்ணீரும் அடக்குமுறைகளும் தான். இத்தகைய சூழலில் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது பாஜக தலைமை.
மாநிலங்களில் நடந்த பல்வேறு சட்டமன்றத் தேர்தல்களில் வரிசையாகத் தோற்று வருவதும் - நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் காட்டி வரும் எதிர்ப்பும் சேர்ந்து எந்தச் செல்வாக்கும் இல்லாத அரசாங்கமாக ஒன்பதாவது ஆண்டில் மொத்தமாகத் தேய்ந்துவிட்டது பாஜக ஆட்சி. எனவே, நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியை விட்டு இறங்குவது மட்டுமல்ல, எதிர்பாராத படுதோல்வியை அடையப் போகிறோம் என்பதை பாஜக தலைமை உணர்ந்துவிட்டது. எனவே, தனக்கு எதிரான ஜனநாயக சக்திகளின் பலத்தைக் குறைப்பதன் மூலமாக வெற்றியை அடையலாமா என்ற இறுதித் தந்திரத்துக்குள் பாஜக தலைமை இறங்கி உள்ளது.
அதன் அடையாளமாக பல்வேறு மாநிலங்களில் விசாரணை அமைப்புகளின் மூலமாக பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். எல்லா மாநிலங்களிலும் சுற்றிய பழிவாங்கும் படலம், தமிழ்நாட்டுக்கும் வந்துவிட்டது. மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை 17 மணி நேரம் விசாரணை என்ற பெயரால் சித்திரவதை செய்துள்ளார்கள். நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இதயச் சிகிச்சை செய்ய வேண்டிய அளவுக்கு நெருக்கடியை உண்டாக்கி விட்டார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியை - அதுவும் அமைச்சரைச் சித்திரவதை செய்வதன் மூலமாக அச்சுறுத்துவது அரசியலே தவிர, விசாரணை அல்ல” என சாடியிருந்தனர்.