Diwali Bus: பயணிகள் கவனத்திற்கு, தீபாவளியால் காலியாகும் சென்னை - பேருந்து, ரயில்களில் அலைமோதும் கூட்டம்
Diwali 2024 Celebration: தீபாவளி கொண்டாட்டத்திற்காக பொதுமக்கள் சென்னையில் இருந்து, சொந்த ஊர்களை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
Diwali 2024 Celebration: பொதுமக்கள் சொந்த ஊர்களை நோக்கி படையெடுக்க தொடங்கியதால், சென்னையில் உள்ள பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
தீபாவளி கொண்டாட்டம்:
சொந்த ஊர்களை விட்டு வாழ்வாதாரத்திற்கான சென்னையில் குடியிருப்போர்களின் எண்ணிக்கை, இந்த நகரின் உண்மையான மக்கள்தொகையை விட அதிகமாகும். விழாக்காலங்களில் அந்த கூட்டம், சொந்த ஊர்களுக்கு படையெடுப்பது வழக்கம். அந்த வகையில் நாளை தீபாவளி பண்டிகை இருப்பதால், கடந்த சில நாட்களாகவே சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர். தொடர்ந்து, நான்கரை நாட்கள் பொதுவிடுமுறை இருப்பதால், வழக்கத்தை காட்டிலும் சற்று அதிகமானோர் பயணித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, அரசு சார்பிலும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பேருந்துகளில் நிரம்பி வழிந்த இருக்கைகள்:
கடைசி நாளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என கருதி, நேற்றே பலர் சென்னையில் இருந்து வெளியோர்களை நோக்கி புறப்பட்டனர். இதனால் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. முன்பதிவு செய்து இருந்தபோதும், மக்கள் இருக்கைகளை பிடிக்க முண்டியடித்ததால் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது.
திருப்பூர் பேருந்து நிலையத்தில் போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணித்ததால், பொதுமக்கள் சுமார் 1கிமீ தூரத்திற்கு வரிசையில் நின்று, 2 மணி நேரம் காத்திருந்து பயணம் மேற்கொண்டனர். சென்னையில் இருந்து பலர் இருசக்கர வாகனம் மற்றும் கார் போன்ற சொந்த வாகனங்களிலும் புறப்பட்டதால், தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ரயில்களில் அலைமோதிய கூட்டம்:
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும், நெல்லை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் முன்பதிவில்லாத பெட்டிகளில் மக்கள் முண்டியடித்துக்கொண்டு ஏறினர். பின்பு போலீசார் கூட்டத்தை நெறிப்படுத்தி ரயில்களில் அனுமதித்தனர். பஸ், ரயில் நிலையங்களில் நேற்றே மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், இன்று அதை விட அதிகமாக மக்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மாலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக வெளியூர் செல்பவர்கள் முறையான திட்டமிடலுன், முன்கூட்டியே வீடுகளில் இருந்து புறப்படுவது நல்ல முடிவாக இருக்கும். சென்னையில் இருந்து மட்டும் இதுவரை சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று இருப்பார்கள் என கூறப்படுகிறது.