Yercaud Flower Exhibition: ஏற்காட்டில் 46 ஆவது கோடை விழா மலர் கண்காட்சி.. எப்போது? எத்தனை நாட்களுக்கு ? முழு விவரம்..
சேலம் ஏற்காட்டில் வரும் 21 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை 8 நாட்கள் கோடை விழா மலர் கண்காட்சி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார்.
![Yercaud Flower Exhibition: ஏற்காட்டில் 46 ஆவது கோடை விழா மலர் கண்காட்சி.. எப்போது? எத்தனை நாட்களுக்கு ? முழு விவரம்.. District Collector Karmegam has announced that the Summer Festival Flower Exhibition will be held for 8 days from 21st to 28th in Salem Yercaud. Yercaud Flower Exhibition: ஏற்காட்டில் 46 ஆவது கோடை விழா மலர் கண்காட்சி.. எப்போது? எத்தனை நாட்களுக்கு ? முழு விவரம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/16/a98939fc0bac9059bf79fbd13441a4331684207838599589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சேலம் ஏற்காட்டில் வரும் 21 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை 8 நாட்கள் கோடை விழா மலர் கண்காட்சி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார்.
ஏழைகளின் ஊட்டி என்றும் மலைகளின் இளவரசி என்றும் அழைக்கப்படும் ஏற்காட்டில் ஆண்டு முழுவதும் மிதமான சீதோஷ்ண நிலையுடன் ரம்மியமாக இருப்பதால் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கோடை விடுமுறையை மகிழ்வோடு கழிக்கும் வகையில் கடந்த 15 நாட்களாக ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் ஏற்காட்டில் 46 ஆவது கோடை விழா மலர் கண்காட்சி வருகின்ற 21 ஆம் தேதி துவங்கி 28 ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறும் என்று சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் இன்று அறிவித்துள்ளார்.
இதனையடுத்து கோடை விழா மலர் கண்காட்சியை யொட்டி ஏற்காடு அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கியது. இங்கு சுமார் 5 லட்சம் மலர்களைக் கொண்டு பல்வேறு வடிவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொன்னியின் செல்வன் கப்பல், சோட்டா பீம், ஹனி பீம் என மக்களை கவரும் வகையில் பல்வேறு மலர் அலங்கார வடிவமைப்பு அமைக்கப்பட உள்ளன.
இது தவிர மலர்கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுமார் 10,000 மலர் தொட்டிகளில் விதவிதமான அரிய வகை மலர்கள் நடப்பட்டுள்ளது. அண்ணா பூங்காவில் மலர் தொட்டிகளில் வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குவதை கண்ட ஏராளமான சுற்றுலா பயணிகள் மலர்களின் அருகே நின்று செல்பி எடுத்து ரசித்தனர்.
மேலும் ஏற்காட்டில் உள்ள லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், தலைச்சோலை கோவில், பக்கோடா பாயிண்ட் , மான் பூங்கா, ஏரி பூங்கா, பறவைகள் சரணாலயம் உள்ளிட்ட இடங்களிலும் திரண்ட சுற்றுலா பயணிகள் குளிர்ந்த காற்றையும், இயற்கை அழகையும் வெகுவாக ரசித்து மகிழ்ந்தனர்.
அடுத்த வாரம் நடைபெற உள்ள மலர் கண்காட்சிக்காக ஏராளமான மலர்கள் தற்போது இருந்தே நடவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தாலும், ஏற்காடு முழுவதும் மிகவும் சுகாதாரமாக உள்ளது என்றும் பிளாஸ்டிக் இல்லாததை கண்டு வியப்பாக உள்ளது என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே கோடை விழா ஏற்பாடுகள் குறித்து சேலம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் பாலச்சந்தர் மற்றும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் அண்ணா பூங்கா, ஏரி பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)