Crime : ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை : 24 மணிநேரத்தில் சிக்கிய 133 ரவுடிகள்..! போலீஸ் அதிரடி
தமிழ்நாட்டில் நடந்த ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் 133 முக்கிய ரவுடிகள் பிடிபட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடந்த "ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை"யில் கடந்த 24 மணிநேரத்தில் 133 முக்கிய ரவுடிகள் பிடிபட்டுள்ளனர். பிடிபட்ட 133 பேரில் கொலை, கொள்ளை வழக்குகளில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட 15 பேர், முக்கிய ரவுடிகள் 13 பேரும் சிக்கியுள்ளதாக டி.ஜி.பி. சைலேந்திர பாபு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த தேடுதல் வேட்டையில், பல ஆண்டுகளாக தேடிக் கொண்டிருந்தும் பிடிபடாமல் இருந்த பிரபல 13, A+ ரவுடிகள் சிக்கினர்.
இதுகுறித்து காவல்துறை சார்பில் வெளியிட்ட பத்திரிகை செய்தியில், ‘கடந்த 24 மணி நேரத்தில் 'மின்னல் ரவுடி வேட்டை' தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இதில், 133 முக்கிய ரவுடிகள் பிடிபட்டனர். கொலை, கொள்ளை வழக்குகளில் பிடியாணை (Warrant) நிலுவையில் இருந்த 15 பேர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதோடு பல ஆண்டுகளாக தேடிக் கொண்டிருந்தும், பிடிபடாமல் இருந்த பிரபல 13, A+ ரவுடிகளும் சிக்கினர். இவர்கள் மீது பல கொலை, கொள்ளை, நில அபகரிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிடிபட்ட மற்ற 105 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. காவல்துறையில் 'மின்னல் ரவுடி வேட்டை' தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.