இலங்கை தொடுக்கும் கடல் அரசியல் : மீனவர் உயிருக்கு ஆபத்தா ?
பேருந்துகளை தொடர்ந்து இரயில் பெட்டிகளையும் இலங்கை அரசு கடலில் தூக்கிப்போட முடிவு செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொலைவுகளை கடக்க அம்பா பாடல்கள் பாடி வலையோடும் படகோடும் பசியாற்ற மிதக்கிறான் மீனவன். பறந்து கிடக்கும் கடலை நம்பி, பல கோடி மக்கள் பசியாற்றி வாழ்கின்றனர். கடல் மடியில் இருந்து மனிதனுக்குத் தேவையான உணவு வகை முதல் ஆடம்பரப் பொருட்கள் வரை கடல் வழங்கி வருகிறது. எதிர்காலத்தில் மனித குலத்துக்குத் தேவையான உணவில், 80 % மேல் கடலிலிருந்தே பெறப்போகிறோம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு அமுதமான கடல் உணவுகளை, மழை, வெயில், புயல் எனப் பாராது கரைக்குக் கொண்டுவந்து சேர்ப்பவர்கள், தான் மீனவ சமூகம். இந்த மீனவசமூகத்தின் விவசாய பகுதியான கடலில் இலங்கை விஷத்தை கொட்டுவதற்கு சமமாக பழைய வாகனங்களை இறக்கி ஒரு மோசமான நிலையை ஏற்படுத்த ஆயத்தமாகி வருவதாக இராமேஸ்வர மீனவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
தனுஷ்கோடி துவங்கி வேதாரண்யம் வரையிலான மீனவர்களின் மீன்பிடி தொழிலை அழிக்கும் நடவடிக்கையில் துவங்கியுள்ளது இலங்கை அரசு. தங்கள் நாட்டு கடல் பகுதியில் மீன்வளத்தை அதிகரிக்க ஆழ்கடல் நடுவே பழைய பேரூந்துகளை போடும் 'நூதன' திட்டத்தின் மூலம் இத்தகைய அத்துமீறல்களில் இறங்கியுள்ளது இலங்கை அரசு. சாயுரு' என்ற கடற்படை கப்பல் மூலம் 40-க்கும் மேற்பட்ட பேரூந்துகளை நடுக்கடலில் போட்டு வருகின்றனர். இதனால் கடலின் சுற்றுச்சூழலும், மீனவர்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என அச்சம் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து ஏ.ஐ.டி.யூ.சி மீனவர் சங்க மாநில செயலாளர் பி.ஆர். செந்தில்வேல் நம்மிடம்," மீன்பிடி தொழில்கள் வளர்ச்சிபெறும் முன் மீன்வளத்தை அதிகரிக்கும் வகையில் மரக்கிளைகள், பனை ஓலைகளிலான கூண்டுகள் ஆகியவற்றை கரையோர கடல் பகுதி மற்றும் மீன்களுக்கான களப்பகுதிகளில் போடுவது வழக்கம். இவற்றின் மூலம் உண்டாகும் நிழலினை நாடி அதிகளவிலான மீன்கள் வாழும். இதனால் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்பட்டதில்லை. மீன்பிடி தொழில் வளர்ச்சியடையும் போது நவீன வலை, படகு, மீன் பிடி முறை எல்லாமே மாறிவிட்டது. இந்தியா, நார்வே ஒப்பந்தம் ஏற்பட்ட பின் இழுவலைகள் மூலம் மீன் பிடித்துவருகிறோம்.
இதன் மூலம் பாக் ஜலசந்தி பகுதியில் அதிகளவு இறால்கள் கிடைத்து வருகின்றனர். இங்கு மீன்கள் பெரிய அளவுடையது கிடைக்காது. அதிகபட்டசம் 250 கிராம் எடைக்கு மேல் இருந்தாலே ஆச்சரியம் தான். அதனால் இறால்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இந்த இறால்கள் மிகவும் சுவை, தரமிக்கது. பழனி பஞ்சாமிர்தம், மணப்பாறை முறுக்கு மாதிரி இப்பகுதி இறால் சிறப்புடையது. இந்நிலையில் இது போன்ற இழுவலைகளை சேதப்படுத்தி தொழில்களை பாதிப்படைய செய்யும் நோக்கில் இலங்கை அரசு பழைய பேருந்துகளை உள்ளே இறக்கிவருகிறது. இதனால் கடல் உள் வாங்கும் சமயத்தில் இதன் தாக்கம் வெளிப்படும். நீரோட்டம் வழியாக பழைய பேருந்துகள் வலைகளை சேதப்படுத்தலாம். அதே போல் நம்மிமுடைய வலைகளும் பாகங்களில் சிக்கலாம். இப்படி பல்வேறு கேடுகளை உருவாக்கும்.
யாழ்ப்பாணத்தின் வட பகுதி தொடங்கி புங்கடி தீவு, கோபுர தீவு, நெடுந்தீவு கடந்து கச்சத்தீவு வரையிலான ஆழ்கடல் பகுதியில் பழைய பேரூந்துகளை கடலில் போட்டு மீன்வளத்தை பெருக்கப்போவதாக இலங்கை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஆனால் இது முற்றிலும் பலிவாங்கும் நோக்கம் மட்டுமே. பேருந்து பாகங்களை இறக்குவதற்கு எதிர்ப்பு தெரிக்கும் நிலையில் இரயில் பாகங்களையும் போடுவோம் என்று தெரிவிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
எந்த பகுதியில் பேருந்து கிடக்கிறது என்பதை அறியாமல் செல்லும் படகுகள் கடலில் கிடக்கும் பேரூந்தில் உராய்வதால் ஏற்படும் துளைகளால் தண்ணீர் புகுந்து படகு கடலில் மூழ்கும் ஆபத்தும் உள்ளது. இதனால் மீனவர் உயிர் பலியும் ஏற்படும். கச்சத்தீவில் இருந்து ஒன்னரை கடல் மைல் தொலைவில் மீன்வளம் நிறைந்த களம் உள்ளது. அங்கு உருவாகும் மீன்கள் இருநாட்டு பகுதிக்கும் செல்லும். இலங்கை அரசின் புதிய திட்டத்தினால் இந்த மீன் இனங்களுக்கும் பாதிப்பு உருவாகும்.
இதனால் இலங்கை மீனவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்திய அரசு செயற்கையாக உருவாக்கும் பவளப்பாறைகளை கடல் ஓரங்களில் போட்டு சுற்றுச்சூழல் ஆரோக்கிய மிக்க செயலை செய்கிறது. ஆனால் இலங்கை இதற்கு ஏறுக்கு மாறாக செயல்படுகிறது. எனவே இந்த பிரச்னையை தமிழ்நாடு முதல்வர் கவனத்தில் எடுத்துக்கொண்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இலங்கை அரசின் வஞ்சிக்கும் போக்கை தடுக்க வேண்டும்" என்றார்.
இதை படிக்க மிஸ்பண்ணாதீங்க பாஸ் -மதுரை : பல சட்டப் போராட்டங்களுக்கு பின் பெண் பூசாரியாக வென்ற பின்னியக்காளின் கதை தெரியுமா..!