Sitrang Cyclone : உருவானது சிட்ராங் புயல் : தமிழகத்திற்கு பாதிப்பா..? எங்கெல்லாம் மழை பெய்யும்..?
சிட்ராங் புயல் 6 மணி நேரத்தில் வடக்கு திசையில் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து மையம் கொண்டு, வடகிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும்.
சிட்ராங் புயல் நாளை அதிகாலை வங்கதேசத்துக்கு அருகே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருந்தது.
பின் மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் "SITRANG" புயல் 6 மணி நேரத்தில் வடக்கு திசையில் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து இன்று அக்டோபர் 24 ஆம் தேதி 5.30 மணி நேரத்தில் மையம் கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன்பிறகு தொடர்ந்து வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து, அக்டோபர் 25 அதிகாலையில் வங்காள தேச கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
24.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
25.10.2022 முதல் 27.10.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
24.10.2022: மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஒரிசா - மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
25.10.2022:, வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள- வங்கதேச கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஒரிசா கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தப் புயல் எச்சரிக்கை காரணமாக ஒடிசா மாநில அரசு அதன் 7 கடலோர மாவட்டங்களை உஷார்படுத்தியுள்ளது. கஞ்சம், பூரி, ஜகத்சிங்பூர், குர்தா உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்படக்கூடும் என்று வானிலை ஆய்வு மையங்கள் முன்னெச்சரிக்கை கொடுத்துள்ளது.