Cyclone Senyar: உருவான ‘சென்யார்‘ புயல்; தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இருக்கா.? வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன.?
மலாக்கா ஜல சந்தியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதற்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய ‘சென்யார்‘ என பெயரிடப்பட்டுள்ளது.

அந்தமான் அருகே மலாக்கா ஜல சந்தியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்று புயலாக மாறியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு, ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய ‘சென்யார்‘ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுமா.? வானிலை மையம் என்ன சொல்லியிருக்கிறது என்பதை பார்ப்போம்.
உருவான ‘சென்யார்‘ புயல் - எங்கு கரையை கடக்கும்.?
வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, இன்று காலை 5.30 மணியளவில் இந்த ‘சென்யார்‘ புயல் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வானிலை மையத்தின் கணிப்பின்படி, இந்த சென்யார் புயல், அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு திசையில் நகர்ந்து, இந்தோனேசியாவில், வடக்கு சுமத்ரா பகுதியில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், 24 மணி நேரம் இந்த புயலின் தீவிரத்தை தக்கவைத்து, பின்னர் படிப்படியாக வலுவிழக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இருக்குமா.?
இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, சென்யார் புயல் 2,600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டிற்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கையில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று(26.11.25) தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.




















