திருமணமான 2 மாதத்தில் 9 மாத கர்ப்பம்! - புதுப்பெண் கொடுத்த வாக்குமூலம்: மாமா மீது போக்சோ வழக்கு!
கடலூர் அருகே திருமணமான 2 மாதத்தில், புதுப்பெண் 9 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கணவர் அளித்த புகாரின் பேரில் நெய்வேலி போலீசார் விசாரணை

கடலூர்: கடலூர் அருகே திருமணமான 2 மாதத்தில் 9 மாத கர்ப்பம், புதுப்பெண் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம் அளித்த நிலையில் நெய்வேலி போலீசார் விசாரணை.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த செவிலியராகப் பணியாற்றும் ஒரு பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த செப்டம்பர் 4-ம் தேதி திருமணம் நடைபெற்றது. மகிழ்ச்சியுடன் தொடங்கிய இந்த இல்லற வாழ்க்கை, திருமணமான இரண்டு மாதங்களிலேயே அதிர்ச்சியான திருப்பத்தை சந்தித்தது.
கணவருக்கு ஏற்பட்ட சந்தேகம் - மருத்துவமனையில் அம்பலமான உண்மை
திருமணமான சில நாட்களிலேயே, புதுப்பெண் அடிக்கடி வயிறு வலிப்பதாகக் கூறி வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அவரது கணவர், அவரை குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அந்தப் பெண் 9 மாத கர்ப்பமாக இருப்பதாகக் கூறி, அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர்.
திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன நிலையில், மனைவி ஒன்பது மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்த கணவர் நிலைகுலைந்தார். உடனடியாக, தனது மனைவியை அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு, இதுகுறித்து நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்
கணவரின் புகாரின் பேரில், நெய்வேலி அனைத்து மகளிர் போலீசார் புதுப்பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்தப் பெண் அளித்த வாக்குமூலம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விசாரணையில், திருமணத்திற்கு முன்பு, உடல்நிலை சரியில்லாமல் இருந்த தனது மாமா லிங்கமுத்துவை கவனித்துக் கொள்வதற்காக அவர் அவரது வீட்டிற்குச் சென்றதாகவும், அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கத்தின் விளைவாக தான் கர்ப்பமானதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.
போக்சோ வழக்கு பதிவு - விசாரணையில் சிக்கல்
போலீசார் விசாரணையின் போது, அந்தப் பெண்ணின் வயது 17 மட்டுமே என்பது தெரியவந்தது. இதையடுத்து, திருமணத்திற்கு முன்பே, மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, அவரது மாமா லிங்கமுத்து மீது போக்சோ (POCSO) பிரிவின் கீழ் நெய்வேலி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் மேலும் ஒரு சிக்கல் எழுந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லிங்கமுத்து, கடந்த இரண்டு மாதங்களாக கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால், மாமா லிங்கமுத்துவிடம் உடனடியாக விசாரணை மேற்கொள்ள முடியாத சூழ்நிலையில், மணமகள் வீட்டாரிடம் நெய்வேலி மகளிர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான இரண்டு மாதத்தில் புதுப்பெண் 9 மாத கர்ப்பமாக இருப்பது, அதுவும் மாமா மீது புகார் எழுந்தது குறிஞ்சிப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















